Saturday, August 17, 2013

இப்படியெல்லாம் ஆரம்பித்து விடுவார்களோ?

இங்கு பார் வசதி உண்டு!
     மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு.


   


இளைப்பாற படுக்கை வசதி உண்டு!
    கஞ்சா மூளையைக் கொல்லும்.

செயின் ஸ்மோக்கர்களுக்குச் சிறப்பு பணிவிடை!
      புகை பிடித்தல் புற்று நோயை வரவழைக்கும்.

வலிக்காமல் போடப்படும்
       போதை ஊசி ஆயுள் குறைக்கும்

 குறைந்த கூலி, நிறைய ஆட்கள்!
      அடிதடி சட்டப்படி குற்றம்.

ஒரே வீச்சில் தலையெடுக்கும்!
    கொலை செய்தல் பாவம்.

பல்லியும் டயரும் இலவசம்!
   சாராயம் கண்ணுக்கு கேடு.

சூப்பர் பாஸ்ட் சுருக்கு கயிறுகள்!
   தற்கொலை குடும்பத்தைச் சீரழிக்கும்

ஓரடி நீளும் மடக்கு பூரிக்கட்டைகள்!
    குடும்ப அடிதடி கோர்ட்டில் நிறுத்தும்.

சிறந்த ஆசிரியர் குழுவால் தயாரிக்கப்பட்டது!
    பிட் அடிப்பது  ஐந்து வருட தடைக்கு வழிவகுக்கும்

நூறு ரூபாய்க்கு கண் அறுவை சிகிச்சை
    போலி டாக்டரும் எமனும் ஒன்றாகும்.

 உண்டியலை உபயோகிக்கவும் 
     லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் 

ஒத்தை ரூபாயில் ஒரு கோடி!
    அதிர்ஷ்டத்தை நம்பி வீணாகாதே.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Sunday, January 15, 2012

சத்தமா சிரிங்க..!

*************************************************************************************
ஆபரேசன் தியேட்டரில்

சிஸ்டர், இவருக்கு உள்ளால எல்லாமே வேற மாதிரி இருக்கு. மை காட், கிட்னி கிடந்து மேலும் கீழுமா அடிக்குது.

அய்யோ டாக்டர்..இது இதயம்!

*************************************************************************************
மன்னாதி மன்னன்

அமைச்சரே, நான் முதுகில் கவசம் அணிந்து போருக்குச் செல்வதை நமது அரசவை கவிஞர் தான் புதிதாக எழுதி வரும் பாட்டில் பதிவு செய்து விட்டாராமே. அந்த கிழட்டிடம் போய் சொல்லுங்கள், எமது வாள் துடிக்குதென்று.

மன்னர் மன்னா, பொறுமையாக இருங்கள். நீங்கள் சுழன்று அடிப்பதில் வீரன் என்று தான் அவர் எழுதியுள்ளார்.

*************************************************************************************
நல்லதொரு குடும்பம்

என்னங்க, பக்கத்து வீட்டு பரிமளாவுக்கும் உங்களுக்கும் ஏதோ லிங்குனு பேசிக்கிறாங்க. எனக்கு ஒரு வழி சொல்லுங்க.

பின்வாசல்ல இருந்து ஸ்ரைட்டா போனா மூணாவது லெப்ட்.

*************************************************************************************
ஊழல் எதிர்ப்பு மக்கள்

ஓட்டுக்கு 300 ரூபா கொடுத்த நம்ம தலைவர போட்டு மக்கள் கும்மி எடுக்கிறாங்க. பரவாயில்லையே, மக்களுக்கு சுயமரியாத வந்துடிச்சி போல.

பக்கத்து ஊர்ல 500 கொடுத்தாராம்.

*************************************************************************************
பார்க் பெஞ்சில்

அன்பே, உன் கருங்கூந்தல் இருள்காடு. விழிகள் இரட்டை வில். இதழ்களோ வண்டுகளைத் தடம் புரட்டும் தேன்மலர்கள்..

டேய் ஸ்டாப் ஸ்டாப். இடியட், கொஞ்சம் புரியற மாதிரி பேசேன்டா.

************************************************************************************

Sunday, November 20, 2011

எங்கே நடுநிலை?

ஒரு குறிப்பிட்ட தமிழ் சேனலில் கூடங்குளம் தொடர்பாக வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளன. கூடங்குளம் அணு உலை வேண்டுமா, கூடாதா என்பது இந்த பதிவின் நோக்கமல்ல. அணு உலைக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நிறைய போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் பல்லாயிரக்கணக்கானோர் இவற்றில் கலந்து கொண்டுள்ளதாகவும் சில நூறு பேர் அமர்ந்திருக்கும் பந்தல்களைக் காட்டி தொடர்ந்து செய்தி வெளியிட்டு வரும் அந்த தொலைக்காட்சி, அணு உலைக்கு ஆதரவானவர்களிடம் பேட்டி எடுத்து வெளியிடுவது போல அதற்கு எதிராக போராடுபவர்களின் கருத்துகளையும் தருவது தானே நடுநிலைக்கு அழகு? அணு உலைக்கு எதிரான போராட்டங்களை இப்படி இருட்டடிப்பு செய்வது ஏன்?

இப்போதெல்லாம் நடுநிலையான ஊடகங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதே பெரிய வேலையாகப் போய் விட்டது நமக்கு. ஒரு பக்கம் நேஷனல் மீடியா என்று சொல்லிக் கொண்டு ஒரே பிரச்சனையை ஒரு வாரம் முழுக்க விவாதிக்கும் ஊடகங்கள், மறுபக்கம் தமக்குப் பிடித்த செய்திகளை மட்டுமே ஒளிபரப்பும் அரசியல்வாதிகளின் கொள்கை பரப்பு ஊடகங்கள்...

தமக்குப் பிடிக்காத செய்திகளை இருட்டடிப்பு செய்வதிலும் திரித்து வெளியிடுவதிலும் நிறைய ஊடகங்கள் வல்லவர்களாகவே உள்ளனர். சென்ற ஆண்டின் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட உடன் “சல்மான்ஸ் தபாங் ஒன் நேஷனல் அவார்ட்” என்று செய்தி வெளியிட்ட “தேசிய” ஊடகங்களை என்னவென்று சொல்ல?

யார் நடத்தினால் என்ன? செய்திகளில் நடுநிலை வேண்டாமா? இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் பாமர மக்களை ஏமாற்றி பிழைப்பை ஓட்டுவது?