Saturday, August 28, 2010

நாம் கொடுத்து வைத்தவர்கள்!

எச்சரிக்கை: மெல் இதயம் படைத்தோர் தயவு செய்து இந்த இடுகையைத் தவிர்க்கவும்.

முன்னொரு காலத்தில் மந்தையா என்றொரு நாடு இருந்தது. வளமிக்க நாடான அது வெவ்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கித் தவித்தது. பின்பு ஒரு 47-ஆம் ஆண்டில் மந்தையா நாடு விடுதலை பெற்றதாக அறிவிக்கப்பட்டு அங்கே கொள்ளையர் ஆட்சி மலர்ந்தது. அங்கே மலர்ந்ததாகச் சொல்லப்படும் மக்களாட்சியின் பல்வேறு கோட்பாடுகள் இங்கே உங்கள் பார்வைக்கு.

௧. மந்தையா நாட்டின் சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால் பெரும் குற்றம் செய்யும் செல்வந்தர்களும் அரசியல்வாதிகளும் சரசியல்வாதிகளும் சிரித்துக்கொண்டே போலீஸ் வேனில் ஏறுவார்கள். ஏழைகள் மட்டுமே அழுது கொண்டு போலீசாருடன் செல்வார்கள்.

௨. லஞ்ச ஒழிப்புத்துறை என்ற ஓன்று ஊழலை ஒழிக்கும் குறிக்கோளுடன் மக்கள் வரிப்பணத்தில் இயங்கும். அவர்கள் அவ்வப்போது ஆயிரம் முதல் ஐந்தாயிரம் வரை லஞ்சம் வாங்கும் சிறிய அதிகாரிகளைப் பிடித்து சாதனை செய்வார்கள்.

௩. மதுவிலக்கு பிரிவும் உண்டு. பாவம், அவர்கள் என்ன வேலை செய்வார்கள் என்று தெரியவில்லை.

௪. ஒரு கொலை செய்தால் 14 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். அதுவே இருபதாயிரம் பேரைக் கொன்றால்? தலைக்கு இரண்டு ரூபாய் வீதம் நாற்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

௫. மந்தையா நாட்டின் மாநில அளவிலான தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமானால் குறைந்த பட்சம் ஐந்து கோடியும் தேசிய அளவிலான தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமானால் குறைந்தது பதினைந்து கோடியும் செலவிட வேண்டியது அவசியம். ஆனால் தேர்தல்களில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.

௬ . தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அடுத்தத் தேர்தலின் போது மட்டுமே தங்கள் தொகுதி பக்கம் தலை காட்ட வேண்டும். தேவை இல்லாமல் அடிக்கடி தொகுதிக்கு வந்து மக்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது. ஆகையால் தேர்தலின் போதே மக்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்துவிட வேண்டும்.

௭. ஆட்சியாளர்களின் குற்றங்கள் வெளியே தெரிந்து விட்டால் அவர்களைப் பாதுகாப்பதற்காக (?!) விசாரணை கமிஷன்கள் அமைக்கப்படும்.

௮ . எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் ஒத்த கொள்கைகள் கொண்ட கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்துக் கொள்ளலாம் என்று எழுதி வைக்கப்படும். ஆனால் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து மக்களை முட்டாளாக்குவதே கட்சிகளின் கொள்கையாகக் கருதப்படும்.

௯ . ஆட்சி கவிழும் நிலைமை ஏற்பட்டால் எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தேவைக்கேற்ப விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். ஆனால் நல்ல விலை கொடுக்க வேண்டும்.
௰ . ஏதாவது பிரச்சனைகளை அவ்வப்போது செய்தி சேனல்கள் கிளப்பும். பாவம், அவர்களும் பிழைக்க வேண்டும் அல்லவா? அவர்களுக்குப் புதிய பிரச்சனைகளைச் சீக்கிரமாக உருவாக்கிக் கொடுத்து பழைய பிரச்சனைகளை மழுங்கடிக்க வேண்டும். இங்கே டைமிங் ரொம்ப முக்கியம்.

௧௧ . பாலம் கட்ட, கோவில் கட்ட என்று எந்த வேலையானாலும் டெண்டர் விட்ட தொகையில் பாதிப் பணத்தை அதிகாரிகள் முதற்கொண்டு அமைச்சர்கள் வரை சரியாகப் பங்கு பிரிக்க வேண்டும்.

௧௨ . மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட யாரேனும் முற்பட்டால் அவர்கள் மீது பலவித வழக்குகள் பதிவு செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு. அப்படியும் முரண்டு பிடித்தால் மறைமுக மரண தண்டனை வழங்கவும் ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் உண்டு.

௧௩. பலவருடங்கள் முயற்சி செய்து M.A.S (மந்தையா ஆட்சி பணி) தேர்ச்சி பெறும் பட்டதாரிகளை அரசியல்வாதிகளுக்குக் குடை பிடிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். குடை பிடிக்கத் தெரியாதவர்களை அனுப்ப மழை பெய்யாக் காடுகள் 'உருவாக்க' ப்படும்.

௧௪ . மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களைப் பதவியில் அமர்த்துவதற்காக மாநிலங்கள் அவை என்ற ஒன்றை உருவாக்கி, மக்களின் பணத்தைக் கொள்ளையடித்துக் கொள்ளலாம்.

நல்ல வேளை, நமது தாய்த்திரு நாடாம் இந்திய நாட்டில், கொள்கைகள் அனைத்தும் இந்த மந்தையா நாட்டின் கொள்கைகள் போலில்லாமல் எவ்வளவு நன்றாக உள்ளது! அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வோமாக!

Saturday, August 21, 2010

டமில் (தமிழ்) படும் பாடு

அண்மையில் கனடா சென்று வந்த எனது கர்நாடக தோழியொருவர் அங்கே தன்னுடன் நட்பு பாராட்டிய இலங்கை தமிழ் பெண் பற்றியும் அவரது பண்பாடு, மொழியழகு பற்றியும் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தார்.

பேச்சினூடே அவர் கேட்டக் கேள்வி.... இலங்கை தமிழர்கள் மலையாளிகள் போன்று மென்மையாகவும் அழகாகவும் பேசுகிறார்கள். ஆனால் தமிழகத் தமிழர்களாகிய நீங்கள் பேசுவது மட்டும் மிகவும் கரடு முரடாக இருக்கிறதே..ஏன்?

எனக்குக் கொஞ்சம் தூக்கி வாரிப் போட்டது போலிருந்தது. இவ்வளவு நாளும் எங்கள் தமிழ் செம்மொழி என்றும் அழகு மொழி என்றும் அல்லவா நினைத்திருந்தேன். தமிழுக்கும் அமுதென்று பேர், செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே...எல்லாம் பொய்யா?

இலங்கை தமிழர்களின் இனிமையானப் பேச்சு நாம் அறிந்ததே!? மலையாளிகள் பறைவது நாம் பேசுவதை விட கேட்க இனிமையாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. சேர நாடு நம்மிடமிருந்து பிரிந்து போனதற்கு தமிழர்களின் பரம்பரை சொத்தான தன்னலமும் ஒற்றுமையின்மையுமே காரணமாக இருந்திருக்க முடியும்.

தமிழிலிருந்து தான் மலையாளம் வந்ததென்றால் மலையாளம் மட்டும் ஏன் இத்தனை இனிமையாக இருக்கிறது? சமஸ்கிருதக் கலவை தான் காரணமென்றால் கன்னடமும் தெலுங்கும் ஏன் அத்தகைய மென்மையைப் பெறவில்லை?

விடை ஒன்றே ஓன்று தான். ஆம். அது மலையாளிகள் தங்கள் மொழி உச்சரிப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்.

மலையாளிகள் எல்லோரும் 'ழ' என்பதை 'ழ' என்று தான் வழங்குகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்கள்? நூற்றுக்கு ஒருவர் இதனைச் சரியாக உச்சரிக்கிறாரா? தமிழ் அரசியலாகிப் போன இந்நாட்டில் தமிழ் அனுபவிக்கும் வேதனைகள் ஏராளம்.

கடந்த வருடம் எனது அறை நண்பர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கையில் எப்படியோ ஒரு விவாதம் கிளம்பியது. தமிழ் எழுத்தான 'ந்' பற்றிய விவாதமே அது. நான் அதை 'இன்' என்று சொல்ல வேண்டும் என்று கூற அதை மறுத்த எனது நண்பர்கள் அதை 'இந்த்' என்று உச்சரிக்க வேண்டும் என்றார்கள். .. எல்லாரும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் விவாதித்ததில் உண்மையிலேயே நான் குழம்பிப் போய் விட்டேன். எவரோ ஒருவர் 'எந்நாளும்' என்று சொல்ல எனது குழப்பம் தீர்ந்தது. GOOGLE'ல் 'nth' என்று டைப் செய்தால் தான் 'ந்' வருகிறது. எனினும் நாங்கள் அனைவரும் அன்று சொன்னதைத் தான் இன்று வரை சொல்லி வருகிறோம்.

சில வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் கல்லூரி போட்டியொன்றில் கலந்து கொள்ளச் சென்ற எனது நண்பரை அங்குள்ள மாணவர்கள் 'மழை' என்பதைச் சொல்லும்படி கேட்டு கூடியிருந்து கைகொட்டிச் சிரித்திருக்கிறார்கள்.
பெரும்பாலானத் தமிழர்கள் 'ஞா' என்பதை 'நா' என்று தான் பேசுகிறார்கள். திங்களுக்கு முந்தைய நாள் இங்கே 'நாயிறு' ஆகி பல நாள் ஆகி விட்டது! மலையாளிகளின் 'ஞான்' தான் காலப் போக்கில் 'நான்' ஆகிப் போனதோ என்று கூட சில வேளைகளில் எனக்கு நினைக்கத் தோன்றும்!

ளகரம் சில பேருக்கு லகரமாகி விட்டது. யுவனின் ஒரு சில பாடல்கள் இந்தக் காரணத்தாலேயே எனக்குப் பிடிப்பதில்லை.

சென்னையில் 'கண்' என்பதை 'கன்' என்று கேட்பதோடு மட்டுமல்லாமல் சில வேளைகளில் பார்க்கவும் செய்யலாம் சுவரொட்டிகளில்.

ஆங்கிலத்தைத் தவறாகப் பேசும் பொழுது ஏற்படும் குற்ற உணர்ச்சி (எ.கா. இஸ்கூல்) ஏன் தமிழைத் தவறாக உச்சரிக்கையில் வருவதில்லை?

தமிழாசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு சிரத்தையுடன் தமிழ் உச்சரிப்பைப் பயிற்றுவிக்க வேண்டும்! அவர்கள் தான் அடுத்த தலைமுறையின் தமிழுக்கு ஆதாரம்!

தயவு செய்து நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம், பிரெஞ்ச், ஜேர்மன் என்று பல மொழிகளையும் சொல்லிக் கொடுக்கும் அதே வேளையில் தமிழ் எழுத்துக்களையும் சரியாக உச்சரிக்கச் சொல்லித் தாருங்கள்! அவர்கள் எப்பொழுதாவது பேசப் போகும் நான்கு தமிழ் சொற்களையாவது நன்றாக பேசிவிட்டுப் போகட்டுமே!

Sunday, August 15, 2010

உங்களுக்குத் தெரியாமல் உங்கள் அருகில்

இந்தப் பதிவை ஆரம்பிக்கும் முன் உங்களிடம் ஒரு சிறு கேள்வி.

உங்கள் அருகில் உங்களுக்குத் தெரியாமல் பத்து பேர் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் சொன்னால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? ஆம், இந்தப் பதிவை வாசித்து முடிக்கையில், நான் மேற்கூறிய கருத்தை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

சரி, விசயத்துக்கு வருவோம்.

கடவுள்! இன்றைக்கு மிகப்பெரிய விவாதப்பொருள், இல்லையா? தொலைகாட்சிகள், பொதுமேடைகள், வலைப்பக்கங்கள் என்று எங்கு பார்த்தாலும் கடவுள் பற்றிய சண்டைகளும் விவாதங்களும் பரவிக் கிடக்கின்றன. பல வேளைகளில் சலிப்படையவும் வைக்கின்றன.

பொதுவாக, கடவுள் இல்லையென்று விவாதிப்பவர்கள், சமயக் கருத்துகளை எடுத்துக் கொண்டு அதில் உள்ள மூடப் பழக்க வழக்கங்களையும் முரண்பாடுகளையும் சரமாரியாகச் சாடுகிறார்கள். கடவுள் நம்பிக்கை உடையவர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு சமயத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் தங்கள் சமயக் கருத்துகளை ஆதரிக்க முற்படுகிறார்கள். இறுதியில் ஒரு ஆக்கப்பூர்வமான விவாதம் வழி தெரியாமல் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுகிறது.

சமயங்கள் எனப்படுபவை, காடோடியாய், வேட்டைக்காரனாய், தன்னலவாதியாய் காட்டில் அலைந்து திரிந்த மனிதனைச் செம்மைப்படுத்த, மனிதர்களால் உருவாக்கப்பட்ட நன்னெறிக் கோட்பாடுகளே.
எனவே கடவுள் பற்றி விவாதிப்பவர்கள் கீழ்க்காண்பவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

௧. சமயங்கள் பொய் என்று நிறுவுதல், கடவுள் இல்லை என்று நிருபித்தல் ஆகாது.
௨. கடவுள் எனப்படுபவர் மனிதருக்கும் பிற உயிரினங்களுக்கும் நன்மை செய்து அதில் மகிழ்ச்சி அடைவராக இருக்க வேண்டியதில்லை.

கடவுள் பற்றிய எண்ணம் நம்மில் ஏற்பட அகத்தியமானக் காரணம் என்ன?

நிரம்ப சுலபம். நமக்கு இந்த பூமி எப்படி வந்தது, ஒலி ஒளி போன்ற இதர சக்திகள் எப்படி வந்தன என்று எதுவுமே விளங்கவில்லை.
பொதுவாக பகுத்தறிவாளர்கள் சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கையையும், உலகத் தோற்றம் பற்றிய பெருவெடிப்பு ( Bigbang) ஆராய்ச்சிகளையும் சாட்சிக்கு எடுத்து வருவார்கள். பரிணாமக் கொள்கையானது ஏற்கனவே இருந்த மூலங்களிருந்து உயிரினங்களின் தோற்றம் மற்றும் மனிதன் வரையிலான அவற்றின் படிப்படியான வளர்ச்சியையுமே விளக்க்குகிறது. மூலப் பொருள்கள் மற்றும் இதர சக்திகளின் தோற்றம் பற்றி பரிணாமம் பேசுவதில்லை. பெருவெடிப்புக்கும் மூலம் தேவை.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். பகலில் வெளிச்சம் தர சூரியன், இரவினில் ஒளி தர நிலவு, ஒலி, ஒளி போன்ற அழிக்க முடியா ஆற்றல்கள் (ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது - ஆற்றல அழிவின்மை விதி), சூரிய ஒளியிலிருந்து தாவரங்கள் தயாரிக்கும் உணவு, தாவர உண்ணிகள், அவற்றின் பெருக்கம் தணிக்க ஊன் உண்ணிகள், செத்த பிணங்களைத் துப்புரவு செய்யக் கழுகுகள்..என்ன ஒரு பிரமிக்க வைக்கும் கட்டமைப்பு.! இது தற்செயலாக நடந்த நிகழ்வு என்று சத்தியமாக என்னால் நம்ப முடியவில்லை.

அது சரி. நமக்கு மேல் நம்மைவிட அதிக சாகசங்கள் செய்யக்கூடிய எதோ ஒரு சக்தியைப் பற்றி (அல்லது ஆற்றல்களின் தொகுப்பைப் பற்றி) நாம் நமது மூளையை வைத்து ஆராய்ச்சி செய்கிறோம் இல்லையா?

நமது காதுகளுக்குக் கேட்கும் திறனில் கட்டுப்பாடு இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் (எ.கா. வவ்வால்களின் மீஒலி நமக்குக் கேட்பதில்லை). நமது கண்களுக்கும் கட்டுப்பாடு உண்டு (பாக்டீரியா, வைரஸ், காற்று). தொடு உணர்விலிருந்து மூக்கு வரைக்கும் அளவீடு உண்டு.
இப்போது ஒரே ஒரு கேள்வி. மூளையின் திறனுக்கு மட்டும் அளவீடு கிடையாதா என்ன? நிச்சயமாக இருக்க வேண்டும். கண்திறனை மூளையால் அளவிட்டோம். மூளையின் திறனை?

நமக்குத் தெரிந்ததெல்லாம் தொடக்கமும் முடிவும்..இந்த உலகத்தின் அதிசயங்கள் அனைத்தையும் நமது மூளையால் கண்டுபிடித்து விடலாம் என்பது அபத்தமாகவேத் தோன்றுகிறது.

ஆக, நம்மை விட மிகப்பெரிய சக்திகள் மீஒலியால் பேசி நமது கண்னுக்குப் புலப்படாமல் தொடு உணர்வுக்கு அகப்படாமல் நமக்கருகே வாழ்ந்து கொண்டிருக்க வாய்ப்புண்டு. நாம் நம்மை விட பெரிய சக்திகளின் கைப்பாவையாகக் கூட இருக்கலாம். நமது வசதிக்காக நாம் இயந்திரங்களைப் படைப்பது போல, அவை ஏதோ ஒரு தேவைக்காக நம்மை உருவாக்கி இருக்கலாம்.

நம்மைப் பொருத்தவரை இந்த பேரண்டம் (பால்வழி அண்டம் உட்பட) தான் இறுதி. அந்த சக்திகளைப் பொருத்தவரை? அதற்கு மேல் இருக்கும் சக்திகளைப் பொருத்தவரை?

ஆம், அதிசயங்கள் தான் உலகம்!

சரி, முடிவில் என்ன தான் சொல்ல வருகிறீங்க என்று எண்ணுகிறீர்களா? உங்களுக்கு இன்னும் புரியவில்லையா?