Sunday, August 15, 2010

உங்களுக்குத் தெரியாமல் உங்கள் அருகில்

இந்தப் பதிவை ஆரம்பிக்கும் முன் உங்களிடம் ஒரு சிறு கேள்வி.

உங்கள் அருகில் உங்களுக்குத் தெரியாமல் பத்து பேர் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் சொன்னால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? ஆம், இந்தப் பதிவை வாசித்து முடிக்கையில், நான் மேற்கூறிய கருத்தை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

சரி, விசயத்துக்கு வருவோம்.

கடவுள்! இன்றைக்கு மிகப்பெரிய விவாதப்பொருள், இல்லையா? தொலைகாட்சிகள், பொதுமேடைகள், வலைப்பக்கங்கள் என்று எங்கு பார்த்தாலும் கடவுள் பற்றிய சண்டைகளும் விவாதங்களும் பரவிக் கிடக்கின்றன. பல வேளைகளில் சலிப்படையவும் வைக்கின்றன.

பொதுவாக, கடவுள் இல்லையென்று விவாதிப்பவர்கள், சமயக் கருத்துகளை எடுத்துக் கொண்டு அதில் உள்ள மூடப் பழக்க வழக்கங்களையும் முரண்பாடுகளையும் சரமாரியாகச் சாடுகிறார்கள். கடவுள் நம்பிக்கை உடையவர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு சமயத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் தங்கள் சமயக் கருத்துகளை ஆதரிக்க முற்படுகிறார்கள். இறுதியில் ஒரு ஆக்கப்பூர்வமான விவாதம் வழி தெரியாமல் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுகிறது.

சமயங்கள் எனப்படுபவை, காடோடியாய், வேட்டைக்காரனாய், தன்னலவாதியாய் காட்டில் அலைந்து திரிந்த மனிதனைச் செம்மைப்படுத்த, மனிதர்களால் உருவாக்கப்பட்ட நன்னெறிக் கோட்பாடுகளே.
எனவே கடவுள் பற்றி விவாதிப்பவர்கள் கீழ்க்காண்பவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

௧. சமயங்கள் பொய் என்று நிறுவுதல், கடவுள் இல்லை என்று நிருபித்தல் ஆகாது.
௨. கடவுள் எனப்படுபவர் மனிதருக்கும் பிற உயிரினங்களுக்கும் நன்மை செய்து அதில் மகிழ்ச்சி அடைவராக இருக்க வேண்டியதில்லை.

கடவுள் பற்றிய எண்ணம் நம்மில் ஏற்பட அகத்தியமானக் காரணம் என்ன?

நிரம்ப சுலபம். நமக்கு இந்த பூமி எப்படி வந்தது, ஒலி ஒளி போன்ற இதர சக்திகள் எப்படி வந்தன என்று எதுவுமே விளங்கவில்லை.
பொதுவாக பகுத்தறிவாளர்கள் சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கையையும், உலகத் தோற்றம் பற்றிய பெருவெடிப்பு ( Bigbang) ஆராய்ச்சிகளையும் சாட்சிக்கு எடுத்து வருவார்கள். பரிணாமக் கொள்கையானது ஏற்கனவே இருந்த மூலங்களிருந்து உயிரினங்களின் தோற்றம் மற்றும் மனிதன் வரையிலான அவற்றின் படிப்படியான வளர்ச்சியையுமே விளக்க்குகிறது. மூலப் பொருள்கள் மற்றும் இதர சக்திகளின் தோற்றம் பற்றி பரிணாமம் பேசுவதில்லை. பெருவெடிப்புக்கும் மூலம் தேவை.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். பகலில் வெளிச்சம் தர சூரியன், இரவினில் ஒளி தர நிலவு, ஒலி, ஒளி போன்ற அழிக்க முடியா ஆற்றல்கள் (ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது - ஆற்றல அழிவின்மை விதி), சூரிய ஒளியிலிருந்து தாவரங்கள் தயாரிக்கும் உணவு, தாவர உண்ணிகள், அவற்றின் பெருக்கம் தணிக்க ஊன் உண்ணிகள், செத்த பிணங்களைத் துப்புரவு செய்யக் கழுகுகள்..என்ன ஒரு பிரமிக்க வைக்கும் கட்டமைப்பு.! இது தற்செயலாக நடந்த நிகழ்வு என்று சத்தியமாக என்னால் நம்ப முடியவில்லை.

அது சரி. நமக்கு மேல் நம்மைவிட அதிக சாகசங்கள் செய்யக்கூடிய எதோ ஒரு சக்தியைப் பற்றி (அல்லது ஆற்றல்களின் தொகுப்பைப் பற்றி) நாம் நமது மூளையை வைத்து ஆராய்ச்சி செய்கிறோம் இல்லையா?

நமது காதுகளுக்குக் கேட்கும் திறனில் கட்டுப்பாடு இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் (எ.கா. வவ்வால்களின் மீஒலி நமக்குக் கேட்பதில்லை). நமது கண்களுக்கும் கட்டுப்பாடு உண்டு (பாக்டீரியா, வைரஸ், காற்று). தொடு உணர்விலிருந்து மூக்கு வரைக்கும் அளவீடு உண்டு.
இப்போது ஒரே ஒரு கேள்வி. மூளையின் திறனுக்கு மட்டும் அளவீடு கிடையாதா என்ன? நிச்சயமாக இருக்க வேண்டும். கண்திறனை மூளையால் அளவிட்டோம். மூளையின் திறனை?

நமக்குத் தெரிந்ததெல்லாம் தொடக்கமும் முடிவும்..இந்த உலகத்தின் அதிசயங்கள் அனைத்தையும் நமது மூளையால் கண்டுபிடித்து விடலாம் என்பது அபத்தமாகவேத் தோன்றுகிறது.

ஆக, நம்மை விட மிகப்பெரிய சக்திகள் மீஒலியால் பேசி நமது கண்னுக்குப் புலப்படாமல் தொடு உணர்வுக்கு அகப்படாமல் நமக்கருகே வாழ்ந்து கொண்டிருக்க வாய்ப்புண்டு. நாம் நம்மை விட பெரிய சக்திகளின் கைப்பாவையாகக் கூட இருக்கலாம். நமது வசதிக்காக நாம் இயந்திரங்களைப் படைப்பது போல, அவை ஏதோ ஒரு தேவைக்காக நம்மை உருவாக்கி இருக்கலாம்.

நம்மைப் பொருத்தவரை இந்த பேரண்டம் (பால்வழி அண்டம் உட்பட) தான் இறுதி. அந்த சக்திகளைப் பொருத்தவரை? அதற்கு மேல் இருக்கும் சக்திகளைப் பொருத்தவரை?

ஆம், அதிசயங்கள் தான் உலகம்!

சரி, முடிவில் என்ன தான் சொல்ல வருகிறீங்க என்று எண்ணுகிறீர்களா? உங்களுக்கு இன்னும் புரியவில்லையா?

11 comments:

பரிசல்காரன் said...

நெஜமாவே புரியலங்க... எதுக்கும் இன்னம் ரெண்டு மூணு தபா படிச்சுட்டு வர்றேன்...

:)))

ஞாஞளஙலாழன் said...

வருகைக்கு மிக்க நன்றி பரிசல்.

அனுஜன்யா said...

வாவ். பெரிய விதயத்தை எளிய மொழியில் பேசுகிறீர்கள்.

//கண்திறனை மூளையால் அளவிட்டோம். மூளையின் திறனை?

..இந்த உலகத்தின் அதிசயங்கள் அனைத்தையும் நமது மூளையால் கண்டுபிடித்து விடலாம் என்பது அபத்தமாகவேத் தோன்றுகிறது.//

எனக்கும் இது போன்று தோன்றியிருக்கிறது. நாம் நம்மை மீறிய சக்தியை (விருப்பமென்றால் கடவுளை) புரிந்து கொள்ள முயல்வது.... 'கரப்பான் பூச்சி கணினி பயில்வது போல' என்று என் நண்பர்களிடம் சொல்வதுண்டு.

போலவே, அந்த சக்தியோ கடவுளோ நமது பார்வையில் நல்லதாகவே இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதும் :).

அனுஜன்யா

கண்ணகி said...

நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியவகையில்தான் இருக்கிறது...நம்மால் அறிந்துகொள்ளமுடியாததால்தான் அத்ற்கு கடவுள் என்கிறோம்...வித்தியாசமான அறிவுபூர்வமான பதிவு..

ஞாஞளஙலாழன் said...

நன்றி அனுஜன்யா மற்றும் கண்ணகி. உங்களுடைய மேலான பின்னூட்டங்கள் சின்ன செடி செழித்து வளர நிச்சயம் உதவும்.

பயணமும் எண்ணங்களும் said...

௨. கடவுள் எனப்படுபவர் மனிதருக்கும் பிற உயிரினங்களுக்கும் நன்மை செய்து அதில் மகிழ்ச்சி அடைவராக இருக்க வேண்டியதில்லை.

-----------

அப்படியென்றால் அவரை வழிபட தேவையில்லையென்றாகிடுமே...

கடவுள் நல்லதுசெய்வார்/பிரச்னையை தீர்த்து வைப்பார் என்று பயந்துதானே வழிபாடுகளெல்லாம் , நடக்குது.?.

ஞாஞளஙலாழன் said...

நல்லது நண்பரே.

வழிபாடுகளெல்லாம் மதங்களால் தோற்றுவிக்கப்பட்டவை. மதங்களே மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டவை எனும் போது, வழிபாடுகள் அனைத்தும் வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயம் ஆகிவிடுகிறது. அவை பயத்தின் காரணமாகவோ அல்லது எதாவது எதிர்பார்ப்பின் காரணமாகவோ இருக்கலாம். இந்த நம்பிக்கையால் ஒருவர் கெட்டுப் போகாதவரை ஓகே. இந்த நம்பிக்கை மனிதர்களுக்கு ஒரு ஊக்கம் அளிக்க வேண்டுமானால் உதவலாம், தியானங்கள் மூளையை ஒருமுகப் படுத்த உதவுவது போல. எனக்கு வழிபாடுகளின் மீது வேறு எந்த நம்பிக்கையும் இல்லை.

என்னைப் பொறுத்தவரை கடவுள் எனப்படுபவர் ஒரு படைப்பாளி மட்டுமே. நாம் கடவுளை மனிதர்களைப் போல ஒரு உயிரியாகவே பார்க்கிறோம். அது ஏன் மிகப்பெரிய ஆற்றல்களின் தொகுப்பாகவோ அல்லது நமது மூளையாலும் இதர உணர்வுகளாலும் அறிய முடியாத நம்மை விட பெரிய உயிரினச் சமூகமாகவோ இருக்க முடியாது என்பதே எனது கேள்வி.

கும்மி said...

உலகம் எப்படித் தோன்றியது; இவ்வளவு ஒழுங்காக எப்படி இயங்குகின்றது என்பது தெரியாது. அறிவியலும் அதற்கு பதிலளிக்கவில்லை. அதனால், ஒரு மாபெரும் சக்திதான் கடவுளாக இருக்க முடியும் என்று அனுமானம் செய்கின்றீர்கள். அறிவியல் இன்னும் விடையளிக்கவில்லை என்பதற்காக உங்கள் அனுமானத்தை எப்படி முடிவாக கொள்ள முடியும்? அறிவியல் பதிலளிக்கும் வரை பொறுத்திருப்போமே! அதற்குள்ளாக ஏன் நாமாக முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்?

Aashiq Ahamed said...

சகோதரர் ஞாஞளஙலாழன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//இப்போது ஒரே ஒரு கேள்வி. மூளையின் திறனுக்கு மட்டும் அளவீடு கிடையாதா என்ன? நிச்சயமாக இருக்க வேண்டும். கண்திறனை மூளையால் அளவிட்டோம். மூளையின் திறனை?//

சிந்திக்க தூண்டும் வரிகள். தங்களுடைய தேடல்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத்

Aashiq Ahamed said...

சகோதரர் கும்மி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//அறிவியல் பதிலளிக்கும் வரை பொறுத்திருப்போமே! அதற்குள்ளாக ஏன் நாமாக முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்?//

சரி, அது வரை என்னவாக இருக்கலாம்....ஆத்திகராகவா? நாத்திகராகவா?

நன்றி,

உங்கள் சகோதரர்,
ஆஷிக் அஹ்மத்

கும்மி said...

//சரி, அது வரை என்னவாக இருக்கலாம்....ஆத்திகராகவா? நாத்திகராகவா?//

ஆத்திகர் என்றால் என்ன?
நாத்திகர் என்றால் என்ன?

Post a Comment