Saturday, August 21, 2010

டமில் (தமிழ்) படும் பாடு

அண்மையில் கனடா சென்று வந்த எனது கர்நாடக தோழியொருவர் அங்கே தன்னுடன் நட்பு பாராட்டிய இலங்கை தமிழ் பெண் பற்றியும் அவரது பண்பாடு, மொழியழகு பற்றியும் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தார்.

பேச்சினூடே அவர் கேட்டக் கேள்வி.... இலங்கை தமிழர்கள் மலையாளிகள் போன்று மென்மையாகவும் அழகாகவும் பேசுகிறார்கள். ஆனால் தமிழகத் தமிழர்களாகிய நீங்கள் பேசுவது மட்டும் மிகவும் கரடு முரடாக இருக்கிறதே..ஏன்?

எனக்குக் கொஞ்சம் தூக்கி வாரிப் போட்டது போலிருந்தது. இவ்வளவு நாளும் எங்கள் தமிழ் செம்மொழி என்றும் அழகு மொழி என்றும் அல்லவா நினைத்திருந்தேன். தமிழுக்கும் அமுதென்று பேர், செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே...எல்லாம் பொய்யா?

இலங்கை தமிழர்களின் இனிமையானப் பேச்சு நாம் அறிந்ததே!? மலையாளிகள் பறைவது நாம் பேசுவதை விட கேட்க இனிமையாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. சேர நாடு நம்மிடமிருந்து பிரிந்து போனதற்கு தமிழர்களின் பரம்பரை சொத்தான தன்னலமும் ஒற்றுமையின்மையுமே காரணமாக இருந்திருக்க முடியும்.

தமிழிலிருந்து தான் மலையாளம் வந்ததென்றால் மலையாளம் மட்டும் ஏன் இத்தனை இனிமையாக இருக்கிறது? சமஸ்கிருதக் கலவை தான் காரணமென்றால் கன்னடமும் தெலுங்கும் ஏன் அத்தகைய மென்மையைப் பெறவில்லை?

விடை ஒன்றே ஓன்று தான். ஆம். அது மலையாளிகள் தங்கள் மொழி உச்சரிப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்.

மலையாளிகள் எல்லோரும் 'ழ' என்பதை 'ழ' என்று தான் வழங்குகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்கள்? நூற்றுக்கு ஒருவர் இதனைச் சரியாக உச்சரிக்கிறாரா? தமிழ் அரசியலாகிப் போன இந்நாட்டில் தமிழ் அனுபவிக்கும் வேதனைகள் ஏராளம்.

கடந்த வருடம் எனது அறை நண்பர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கையில் எப்படியோ ஒரு விவாதம் கிளம்பியது. தமிழ் எழுத்தான 'ந்' பற்றிய விவாதமே அது. நான் அதை 'இன்' என்று சொல்ல வேண்டும் என்று கூற அதை மறுத்த எனது நண்பர்கள் அதை 'இந்த்' என்று உச்சரிக்க வேண்டும் என்றார்கள். .. எல்லாரும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் விவாதித்ததில் உண்மையிலேயே நான் குழம்பிப் போய் விட்டேன். எவரோ ஒருவர் 'எந்நாளும்' என்று சொல்ல எனது குழப்பம் தீர்ந்தது. GOOGLE'ல் 'nth' என்று டைப் செய்தால் தான் 'ந்' வருகிறது. எனினும் நாங்கள் அனைவரும் அன்று சொன்னதைத் தான் இன்று வரை சொல்லி வருகிறோம்.

சில வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் கல்லூரி போட்டியொன்றில் கலந்து கொள்ளச் சென்ற எனது நண்பரை அங்குள்ள மாணவர்கள் 'மழை' என்பதைச் சொல்லும்படி கேட்டு கூடியிருந்து கைகொட்டிச் சிரித்திருக்கிறார்கள்.
பெரும்பாலானத் தமிழர்கள் 'ஞா' என்பதை 'நா' என்று தான் பேசுகிறார்கள். திங்களுக்கு முந்தைய நாள் இங்கே 'நாயிறு' ஆகி பல நாள் ஆகி விட்டது! மலையாளிகளின் 'ஞான்' தான் காலப் போக்கில் 'நான்' ஆகிப் போனதோ என்று கூட சில வேளைகளில் எனக்கு நினைக்கத் தோன்றும்!

ளகரம் சில பேருக்கு லகரமாகி விட்டது. யுவனின் ஒரு சில பாடல்கள் இந்தக் காரணத்தாலேயே எனக்குப் பிடிப்பதில்லை.

சென்னையில் 'கண்' என்பதை 'கன்' என்று கேட்பதோடு மட்டுமல்லாமல் சில வேளைகளில் பார்க்கவும் செய்யலாம் சுவரொட்டிகளில்.

ஆங்கிலத்தைத் தவறாகப் பேசும் பொழுது ஏற்படும் குற்ற உணர்ச்சி (எ.கா. இஸ்கூல்) ஏன் தமிழைத் தவறாக உச்சரிக்கையில் வருவதில்லை?

தமிழாசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு சிரத்தையுடன் தமிழ் உச்சரிப்பைப் பயிற்றுவிக்க வேண்டும்! அவர்கள் தான் அடுத்த தலைமுறையின் தமிழுக்கு ஆதாரம்!

தயவு செய்து நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம், பிரெஞ்ச், ஜேர்மன் என்று பல மொழிகளையும் சொல்லிக் கொடுக்கும் அதே வேளையில் தமிழ் எழுத்துக்களையும் சரியாக உச்சரிக்கச் சொல்லித் தாருங்கள்! அவர்கள் எப்பொழுதாவது பேசப் போகும் நான்கு தமிழ் சொற்களையாவது நன்றாக பேசிவிட்டுப் போகட்டுமே!

9 comments:

senthil1426 said...

ஞாஞளஙலாழன் ,

how to pronounce it ,mudiyala ennala .................

senthil1426 said...

இலங்கை தமிழர்கள் மலையாளிகள் போன்று மென்மையாகவும் அழகாகவும் பேசுகிறார்கள். ஆனால் தமிழகத் தமிழர்களாகிய நீங்கள் பேசுவது மட்டும் மிகவும் கரடு முரடாக இருக்கிறதே..ஏன்?


avarkal pronounce very soft ,no punch in their language and it flow easily.tamil has difficult pronounce and has some punch.

மங்குனி அமைசர் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைசர் said...

எச்சூச்மி , உங்க பேர எப்படி சார் படிக்கிறது ??? (சென்டர் ஆப் அட்ராக்சனுக்காக தான இந்த பேர செலக்ட் பண்ணுனிங்க )

ஞாஞளஙலாழன் said...

நன்றி செந்தில் மற்றும் மங்குனி.
ஞாஞள-ஙலாழன். இப்படி வாசியுங்கள்.

ஞாஞளஙலாழன் said...

மங்குனி செட்:
சென்டர் ஆப் அட்ராக்சனுக்காக தான இந்த பேர செலக்ட் பண்ணுனிங்க?
அப்படியும் வைத்துக் கொள்ளலாம்..உங்களைப் போல, ஹா ஹா:-)
தமிழில் எனக்கு மிகவும் பிடித்த எழத்துக்கள் இவை என்றும் வைத்துக் கொள்ளலாம்!

அனுஜன்யா said...

சுவாரஸ்யமான சிந்தனை. ஆம், தமிழ் உச்சரிப்பில் கவனம் தேவைதான். சென்னையின் 'வாயப்பயம்' என்பதைக் கிண்டலடிக்கும் தமிழ் ஆர்வலர்கள், தென்தமிழ் நாட்டினரின் 'வாளப்பலம்' வட்டார மொழியின் அளகு என்று கூறி தப்பித்துக் கொள்ளும் சாமர்த்தியத்தையும் பார்க்கிறோம் :).

வித்தியாசமான பெயர். நிறைய எழுதுங்கள்.

அனுஜன்யா

ஞாஞளஙலாழன் said...

உண்மைதான் அனுஜன்யா. இங்குதான் நியாயம் செத்து நிரம்ப நாள் ஆகிவிட்டதே:-)

தருமி said...

//தமிழில் எனக்கு மிகவும் பிடித்த எழத்துக்கள்//

அப்படியென்றால் ஏன் ஞாவும் ஞவும் ..??
எப்பூடி?

Post a Comment