Sunday, September 19, 2010

வெள்ளை தான் அழகா?

உங்கள் உறவினப் பெண்ணொருவர் குழந்தை பெற்றிருப்பதாக உங்களுக்கு வேண்டப்பட்டவர் சொல்கிறார் என்றால் அவரிடம் நீங்கள் என்ன கேட்பீர்கள்?

குழந்தை ஆணா, பெண்ணா என்பது முதல் கேள்வியாக இருக்கும். இரண்டாவது கேள்வி? குழந்தை வெள்ளையா, கருப்பா என்பது தானே? ஏன், சுகப்பிறப்பா, அறுவை சிகிச்சையா, தாயும் பிள்ளையும் நலமா, போன்ற கேள்விகளெல்லாம் உங்களுக்குத் தோன்றாதா?

அண்மையில் என்னை வருத்தமடையச் செய்த நிகழ்வு ஓன்று. ஒரு சிறுமி தனது வகுப்பில் தான் மட்டுமே கருப்பாக இருப்பதாக ஏக்கத்துடன் கூறுகிறாள். அச்சிறுமி எத்தனையாவது படிக்கிறாள் என்று தெரிந்தால் நீங்கள் ஆடிப் போவீர்கள். ஆம், அவள் படிப்பது எல்.கே.ஜி.

வெள்ளை தான் அழகு என்று சிறு வயதிலிருந்தே குழந்தைகளின் மனதில் திணிக்கப்படுகிறது. பெண் குழந்தைகள் பருவ வயதை அடைகையில் இந்த எண்ணம் அவர்கள் மனதில் மிகப்பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

கருப்பாக இருப்பதால் பல பெண்களுக்குத் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. அவர்கள் ஒருவித தாழ்வு மனப்பான்மையுடன் தான் இயங்குகிறார்கள். குழாயடி சண்டைகளிலும் இன்னபிற குடும்பச் சண்டைகளிலும் அவர்களின் கருமை நிறம் எள்ளி நகையாடப்படுகிறது.

தமிழ் நாட்டை விட்டு வெளியே வந்தால் மீசையும் கருப்பும் (அல்லது மாநிறமும்) நாகரீகமான உடையும் தான் தமிழர்களின் அடையாளமாக இருக்கிறது. ஆனால் என்னவோ தமிழர்களின் அழகியல் எண்ணங்கள் எல்லாம் வெள்ளையைச் சார்ந்தே இருக்கிறது. தமிழ் நடிகைகள் எல்லோரும் பளிச் என்ற வெள்ளை நிறத்துடனே தான் வலம் வருகிறார்கள். கருப்பு பெரும்பான்மையாக இருக்கும் ஒரு சமூகத்தில் அந்த நிறம் வெறுத்தொதுக்கப்படுவது மிகவும் வருந்தத்தக்கது.

முகப் பவுடர் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது என்று எனக்கொரு கேள்வி உண்டு. இன்றைக்கு கருப்பாக இருக்கும் பெண்களின் தாழ்வு மனப்பான்மையைப் பணமாக்க நிறைய வணிக நிறுவனங்கள் வெவ்வேறு பூச்சு விளம்பரங்களுடன் வலம் வருகின்றன.

கருப்பாக இருக்கும் பெண்ணை, கண்டு கொள்ளாமல் ஆண் செல்ல, அவள் இத்தகைய பூச்சுகளில் ஒன்றை பயன்படுத்தி வெள்ளையாக மாறுவதும் பின்னர் அதே ஆண் அந்த பெண்ணைக் கண்டு சொக்கி நிற்பதும் போன்று பெரும்பாலான முகப்பூச்சு விளம்பரங்கள் எடுக்கப்படுகின்றன. கருப்பான மக்களைப் பெரும்பாலாகக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் காசுக்கு ஆசைப்பட்டு இத்தகைய விளம்பரங்களில் நடிகர்கள் நடிப்பது வெட்கக்கேடானது.

உலக வரலாற்றைத் திரும்பிப் பார்த்தோமானால் வெள்ளை தான் கருப்பை ஆண்டிருக்கிறது. அடிமைகளாய் தெருவில் போட்டு விற்றிருக்கிறது. அமெரிக்காவில் ஒரு கருப்பின அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது மிகப்பெரிய சாதனையாகி விடுகிறது.

இது ஒரு சமூகச் சிக்கல். தமிழர்களின் மிகப்பெரிய பிரச்சனையே அவர்கள் தங்கள் மேல் கொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மை தான். பகுத்தறிவு வீரம் பேசும் பகலவன்களுக்குக் கூட தன்னினப் பெயர்கள் தாழ்வாய்த் தோன்றும் காலம் இது. வட நாட்டுப் பெயர்களான ரமேசும் சுரேசும் தமிழ்நாட்டை ஆக்கிரமித்து விட்டன. ஆனால் கண்ணையாவும் செல்லையாவும் வட நாட்டுப் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லையே, ஏன்?

அடுத்தவனைப் பின்பற்றி நடக்கும் எவரும் வாழ்வில் எத்தகைய சாதனையையும் நிகழ்த்திவிட முடியாது.

முதலில் நம்மை நாம் மதிப்போம். அப்போது தான் மற்றவர்கள் நம்மை மதிக்கத் தொடங்குவார்கள்

3 comments:

எஸ்.கே said...

இந்த கருப்பு வெள்ளை பிரச்சினை பல காலமாக இருந்து வருகிறது. ஊடகங்களும் குறிப்பாக விளம்பரங்களால் இந்த கருப்பு வெள்ளை ஏற்றத்தாழ்வு மிகைப்படுத்தி காட்டப்படுகிறது. இது குழந்தைப் பருவத்திலிருந்தே விதைக்கப்படுகிறது என்பது வேதனைதான். நம் மனதில் இயறகையாவே கருப்பு என்பது அழகற்றதாகவும் வெள்ளை அழகுள்ளதாகவும் மனதில் படிந்துவிட்டது. தாங்கள் கூறியது போல இது ஒரு சமூகச் சிக்கல்தான். //முதலில் நம்மை நாம் மதிப்போம். அப்போது தான் மற்றவர்கள் நம்மை மதிக்கத் தொடங்குவார்கள் // இது நிதர்சனமான உண்மை.

adhithakarikalan said...

நல்ல கட்டுரை...இந்த கருப்பு வெள்ளை போராட்டத்தை பற்றி எழுத வேண்டும் என்று எண்ணி இருந்தேன்...நீங்கள் முந்திவிட்டீர்கள்...

Arun@Passions said...

Good writing Anand!!!!

Post a Comment