Friday, October 29, 2010

ஞாஞளஙலாழன் பதில்கள்

வாசகர்களின் கேள்விகளுக்கு இதோ பதிவுலகச் செம்மல், சிந்தனை சிற்பி (நீங்க எதுக்குங்க டென்சன் ஆகுறீங்க? எனக்கு அரசியலில் பிடிப்பு அதிகம்னு நண்பர்கள் பேசிக்கிறாங்க) ஞாஞளஙலாழனின் பதில்கள்.

1. இளைஞர்கள் அரசியலுக்கு வர முடியுமா?
வரலாம். ஆயுத எழுத்து போன்ற படங்களில்.

2. அப்படியென்றால் நிஜ வாழ்க்கையில் ஆயுத எழுத்து போன்ற படங்கள் சாத்தியமில்லையா?
சாத்தியம் தான். ஆனால் சூர்யா மாதவனால் சுடப்பட்டதுதான் கிளைமாக்ஸ்.

3. சிறந்த முதலீடு?
பாராளுமன்ற தொகுதிகள்.

4. மோசமான கந்துவட்டிக்காரர்கள்?
அரசியல்வியாதிகள்.

5. கள்ளச் சாராயத்திற்கும் நல்லச் சாராயத்திற்கும் உள்ள வேறுபாடு?
விற்பவன் தான்.

6. பகுத்தறிவுவாதிகள்?
அடுத்தவர்களைப் பகுத்தறிவுடன் வாழச் சொல்பவர்கள்.

7. விவசாயி?
தோல்வி மட்டுமே காணும் தொழிலதிபர்

8. புரியாத முரண்?
கிலோ அரிசி நாற்பது ரூபாய். விவசாயி வீட்டில் பட்டினி.

பின் குறிப்பு: தயவு செய்து எனக்குப் பெரிய தட்டி போர்டு வைத்து விடாதீர்கள்.

Saturday, October 9, 2010

ஆனால் யார் செய்யப் போகிறார்கள்?

ஆளும் கட்சிகளும் எதிர்கட்சிகளும் நாட்டில் எம்.பி.க்களின் சம்பள உயர்வில் மட்டும் தான் ஒற்றுமையாகச் செயல்படுகின்றன என்றொரு கருத்துச் சொல்லப்படுகிறது. ஆனால் இன்னொரு விசயமும் இருக்கிறது. அது என்ன? மேலே படியுங்கள்.

வெயில் காலத்தில் ஒரு இளநீர் பருக வேண்டுமானால் நீங்கள் ரொம்ப தூரம் அலைய வேண்டியிருக்கும். ஆனால் மது அருந்த வேண்டுமென்றால்?

திரைப்படங்களில் கதாநாயகனுடன் நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு காட்சி வருகிறதென்றால் அந்தக் காட்சியில் பெரும்பாலும் அவர்கள் தண்ணி அடிப்பார்கள் அல்லது கதாநாயகனின் காதலை வெற்றி பெற வைக்க ஐன்ஸ்டீன் அளவுக்கு சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். உருப்பட்ட மாதிரிதான்.

தினமும் நூற்றைம்பது ரூபாய் சம்பாதிக்கும் தொழிலாளர்கள் நூறு ரூபாயை மதுவுக்கும் ஐம்பது ரூபாயை வீட்டுக்கும் செலவழிக்கிறார்கள். நிறைய குடும்பங்கள் வறுமையில் வாடுவதற்குக் காரணம் வேலையில்லாத் திண்டாட்டம் காரணம் இல்லை மக்களே! குடும்பத்தலைவர்களின் குடிதான் பெரும்பான்மை காரணம்.

தேர்தல்களின் போது மதுக்கடைகளை மூடிவிடுவதை நீங்கள் பார்க்க முடியும். ஆனால் எல்லாக்கட்சிகளும் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பே பெட்டி பெட்டியாக மதுபானங்களை வாங்கி இருப்பு வைத்து விடுவார்கள். எதற்கு என்று நான் சொல்லியாத் தெரிய வேண்டும்? இவர்களிடமா நீங்கள் மது விலக்கை எதிர்பார்க்கிறீர்கள்?

இன்றைக்குப் பத்தாம் வகுப்பு மாணவர்களில் கூட நீங்கள் பீர் அடிப்பவர்களைப் பார்க்க முடியும். ஆக, அழகான அடுத்தத் தலைமுறையையும் நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அரசே இதைச் செய்வது வெட்கக் கேடில்லையா?

மது விலக்கு கொண்டு வராமல் இருப்பதற்கு அரசால் சொல்லப்படும் காரணங்கள் என்னென்ன?

அரசுக்கு வருமானம் போய்விடும் என்பது முதற்காரணமாக இருக்கலாம். ஆனால் ஏழை குடும்பங்களின் வருமானம் பெருகி விடுமே! எது முக்கியம்? அரசின் வருமானம் தான் முக்கியம் என்றால் சிகரெட், புகையிலை, பாக்கு போன்றவற்றையும் அரசே தயாரித்து விற்கலாமே. வேறு எதையும் நான் சொல்ல விரும்பவில்லை.

கள்ளச் சாராயம் பெருகி விடும் என்பது மற்றொரு காரணம். காவல் துறை மீது அரசுக்கு நம்பிக்கை இல்லையா? ஒரு தவறு நடப்பதைத் தடுக்க வேண்டுமானால் அந்தத் தவறை நாமே செய்ய வேண்டும் என்பது நியூட்டனின் நான்காம் விதியா?

சாராய ஆலைகளை நடத்தும் அரசியல்வாதிகள் மற்றும் பெருமுதலைகளுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்பது தான் காரணமாக இருந்தால் அதற்கு நம்மிடம் தீர்வு இல்லை.

அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் மதுவிலக்கு என்பது அவ்வளவு கடினமான விசயம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். குடிப்பழக்கம் உள்ளவர்கள் சிறிது காலம் சிரமப்படுவார்கள் என்பது உண்மையே. ஆனால் நம் மக்கள் எதற்குமே எளிதாகப் பழகிவிடக் கூடியவர்கள் என்பது அதைவிட உண்மை. மிக முக்கியமான ஓன்று, நமது வரும் தலைமுறைகள் மதுவின் அழிவிலிருந்து காக்கப்படுவார்கள். ஏழைகளின் எண்ணிக்கை பெருமளவு குறையும். ஒரு வலிமையான சமுதாயம் உருவாகும்.

ஆனால் யார் செய்யப் போகிறார்கள்?