Wednesday, January 26, 2011

வேலியில் தொங்கும் ஓணான்கள்

வீடுகளால் சூழப்பட்டிருக்கும் சின்ன பனை மரத்தில் தனது நான்கு கால்கையும் இறுக்கமாய் அப்பிக் கொண்டு, நீண்டு ஒடுங்கிய தலையை ஒரு புறமாய் சாய்த்து, ஒருவித சோகம் படர்ந்த கண்களால் அச்சத்துடன் என்னை நோக்கும் ஓணான்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஒருவித குற்ற உணர்வு என்னில் வந்து போவதை தடுக்க முடியவில்லை.இந்த காலத்திலும் பள்ளி விடுமுறை நாட்களில் கைகளில் கூரான கம்புகளுடன் வேலியோர ஓணான்களை வேட்டையாட சிறுவர்கள் கும்பலாகச் செல்வதை நீங்கள் காண முடியும்.

ஓணான்கள் மட்டுமல்ல, தவளைகளும் புட்டான்களும் (தும்பி) கூட சிறுவர்களின் வன்கொடுமையிலிருந்து தப்ப முடிவதில்லை.


தன்னை நோக்கி ராக்கெட்டு போல பல திசைகளில் இருந்தும் பாய்ந்து வரும் கற்களில் இருந்து தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு ஓணான் படும் பாடு சொல்லி மாளாது. எந்த நேரத்தில் எங்கு இருந்து தாக்குதல் வரும் என்று அறிய இயலாமல் துடிக்கும் அதன் வாழ்க்கை உள்ளத்தை உருக்குவது.

அது மட்டுமல்ல. வாலில் ஓங்கி எரியும் நெருப்புடன் வலியால் துடித்து முன்னோக்கி அலறி ஓடும் ஓணான்களே சிறுவர்களின் புகை கக்கும் 'ஜெட்' விமானங்கள்.

புட்டான்களின் வாலை நுள்ளி எரிந்து விட்டு அதன் பின்புறத்தில் காகிதம் சொருகி பறக்க விட்டு வேடிக்கை பார்க்கும் சிறுவர் சமூகம் நம்முடையது.

நாய்களின் மீது சரியாகக் கல்லெறிவது என்பது சிறுவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் கூட கலை இங்கே.


இப்படியெல்லாம் செய்ய இந்த சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது யார்? அவர்களுக்கு இதெல்லாம் எங்கிருந்து தோன்றுகிறது? மனிதர்கள் பிறவியிலேயே வன்கொடுமை செய்பவர்கள் தானா? வலியைப் பார்த்து ரசிப்பவர்கள் தானா?

ஓணானும் தவளையும் ராமருக்குத் தாகம் எடுத்த போது மோண்டு கொடுத்தன என்ற புனைவு கதையைச் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதை இனிமேலாவது தவிருங்கள்.

நம்மைச் சுற்றி இருக்கும் உயிரினங்களைப் பற்றி நல்ல விதமாக குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். இந்த புவியில் பிறந்த நமக்கு இந்த நிலத்தின் மீது எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே அளவு உரிமை கொஞ்சமும் குறையாமல் நம்மைப் போலவே இங்கே பிறந்த மற்ற உயிரினங்களுக்கும் உள்ளது என்பதை கொஞ்சமும் மறந்து விடாதீர்கள்.

பாவம், அவைகளுக்கு உங்களைப் போல நிலங்களைப் பட்டாப் போடத் தெரியாது. அதனால் அவற்றை ஏமாற்றி விடாதீர்கள்.


Wednesday, January 19, 2011

படிச்சவன் எப்படி ஓட்டு போட முடியும்?

என்னங்க, தேர்தல் நெருங்குகிறது, யாருக்கு வாக்களிக்கலாம் என்று பதிவுகளில் சகட்டு மேனிக்கு விவாதித்துவிட்டு கடைசியில் வோட்டே போடாமல் வேலையைப் போய் பார்ப்பவரா நீங்கள்...

இதோ, "உன்னைப் போல் ஒருவன்"!

இப்படி தாங்க..கடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வோட்டு போட்டாலும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மட்டும் கண்டிப்பாக போட்டு விடக் கூடாது என்று நண்பர்களிடம் பேசிக்கிட்டு இருந்தேன் (ஏனென்று உங்களுக்குத் தெரியும்தானே).

ஆனால் வச்சாங்க பாருங்க ஒரு ஆப்பு.

என்னன்னு கேட்கிறீங்களா? அதான், கரெக்டா புதன் கிழமை தேர்தல்னு அறிவிச்சாங்க...

மக்களே, நம்ம தமிழ் நாட்டுல படிச்சவன் பெரும்பாலும் சொந்த ஊரில் வேலை செய்ய மாட்டான். கல்லூரி முடிஞ்ச உடனே பெட்டிய தூக்கிக் கிட்டு, சென்னைக்கோ பெங்களூருக்கோ அல்லது வேற எங்கேயோ போய்டுவான்..இந்த மாதிரி தேர்தல் தேதி அறிவிச்சா படிச்சவன் எப்படி அய்யா ஓட்டு போட முடியும்?

அலுவலகத்துல தான் விடுமுறை கொடுப்பாங்களே என்கிறீர்களா?

அட போங்க, புதன்கிழமை மட்டும் விடுமுறைய வச்சுகிட்டு சென்னை-ல இருந்து கன்னியாகுமரி போய் வோட்டு போட்டுட்டு வந்துடுவீங்களா நீங்க? சரி, அப்ப மும்பையில இருக்குறவன் என்ன பண்ணட்டும்?

இதுல படிச்சவங்க எல்லாரும் கண்டிப்பா வோட்டு போடணும்னு இவங்க பண்ணுற பிரச்சாரம் வேற..

வங்கி மற்றும் இதர அரசு தேர்வுகள் எல்லாம் ஞாயிற்றுக் கிழமை வைக்கும் இவங்க தேர்தல் நாளை மட்டும் ஏன் இப்படி நடத்தக் கூடாத நாள்-ல நடத்துறாங்க? அதுவும் வாரத்தின் நடு நாள்-ல? தேர்வு ஆணையத்துக்கு தெரியிற விடயம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டும் தெரியாதா என்ன?

இப்ப இருக்குற டெக்னாலஜி வளர்ச்சியில ஒருவர் எந்த வாக்கு சாவடியில இருந்தும் எந்த தொகுதிக்கும் வாக்களிக்கலாம் என்கிற முறையை கொண்டு வருவது ஒண்ணும அவ்வளவு கடினமான விசயம் இல்லை. என்ன அரசியல் வாதிகளுக்குத்தான் கொஞ்சம் கஷ்டம்..இங்க இருந்துட்டு மும்பைக்கு போய் காசு கொடுக்க முடியுமா என்ன?

எது எப்படியோ, இந்த வருடமாவது என்னை வோட்டுப் போட விடுவாங்களா?

பின் குறிப்பு: இத படிச்சிட்டு நீங்க தமிழ்மணத்தில வோட்டு போட மறந்துராதீங்க.

Thursday, January 13, 2011

கடவுளும் பகுத்தறிவும்

நிறைய பேர் என்னிடம் கேட்கும் கேள்வி, "உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா?"

அது சரி, கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் பகுத்தறிவுவாதியாமே, அப்படியா?

கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று எனக்குச் சத்தியமாகத் தெரியாது. அதனால் கடவுள் இருக்கிறார் என்றோ, இல்லை என்றோ சொல்ல எனக்குத் தகுதி இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.....என்ன அது?மக்களே, கடவுள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் தான் உங்களுக்கு என்ன?

ஓஹோ, கடவுள் இருப்பது ஒரு வேளை உண்மையாக இருந்தால் அவரை வணங்க வேண்டுமே என்று கவலைப்படுகிறீர்களா?

அட போங்க நீங்க. கடவுள் உங்களையும் என்னையும் படைத்தது உண்மையானால், அவர் கண்டிப்பாக மிகப் பெரிய படைப்பாளி. நிச்சயமாக ஓர வஞ்சனை செய்ய மாட்டார். அவர் என்ன ஊழல்வாதியா, தன்னை வணங்குபவர்களுக்கு மட்டுமே நல்லது செய்ய?

அப்படியே தனது படைப்புகள் அனைத்தும் தன்னை வணங்க வேண்டும் என்று அவர் கருதினால் ஒவ்வொரு படைப்பிடமும் அந்த விடயத்தை முறைப்படி தெரிவிக்க வேண்டியது அவரின் கடமை அல்லவா?

அவர்தான் ஏற்கனவே தனது தூதர்கள் அல்லது அவதாரங்கள் மூலமாக தெரிவித்து விட்டாரே என்கிறீர்களா?

நண்பரே, பத்து பதினைந்து புத்தகங்களைக் காட்டி, இதைக் கடவுள் தான் தந்தார் என்று நீங்கள் சொன்னால் அதை எப்படி நான் நம்ப முடியும்?

ஆதலால் கடவுள் இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும். இல்லை என்றாலும் எனக்குக் கவலை இல்லை. நான் எனது வழியைப் பார்த்துப் போய்க்கொண்டே இருப்பேன். எனக்குத் தெரியாத ஒன்றை ஏளனமாகப் பேசுவதோ அல்லது பாராட்டி சரணடைவதோ எனது வேலை இல்லை. நீங்கள் எப்படி?

"கடவுளை மற மனிதனை நினை" என்ற வாக்கியம் எனக்கு நிரம்பப் பிடிக்கும், ஒரு சின்ன திருத்தத்துடன். அது "கடவுளை மற, உலகை நினை".

என்னைப் பொறுத்தவரை, மனிதனை மட்டுமல்ல, எல்லா உயிர்களையும்...ஏன், உயிரற்ற இன்ன பிறவற்றையும் நினைக்க வேண்டியது நமது கடமை..நமக்கு முன் இவ்வளவு பணிகள் இருக்கும் பொழுது ஏன், தெரியாத ஒன்றைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டும்? அதை மறந்து விடலாமே?

ஆனால் கடவுளை எதிர்ப்பது தான் பகுத்தறிவுவாதம் என்றால், மக்களே, சத்தியமாக நான் பகுத்தறிவுவாதியல்ல...நீங்கள்?

பின் குறிப்பு:
--------------
நண்பர்களே, பதிவு பிடிச்சிருந்துன்னா சிரமம் பார்க்காம ஓட்டும் போட்டுடுங்களேன்,,,

Friday, January 7, 2011

எதிர்பாரா துயர் தருணங்களில் மனவோட்டம்

சில நிகழ்வுகள் துயரமானவை..சில நிகழ்வுகளில் தருணங்கள் நிகழ்வுகளை விட மிகுந்த துன்பம் கொடுப்பவை.

அவற்றுள் சில..

எங்கெங்கோ சமையல் குறிப்புகள், தொலைக்காட்சியின் சமையல் நிகழ்சிகள் எல்லாவற்றையும் பார்த்து, குறிப்பெடுத்து, பார்த்துப் பார்த்து செய்திட்ட புதிய உணவு ஒன்றை, சரியில்லை என்று கணவன் எளிதாகத் திட்டும் பொழுது, பாராட்டுக்காக ஏங்கிக் காத்திருந்த உடைந்து போன அவள் கனவுகள் அந்த கணம் அவளை என்ன செய்யும்?எங்கெங்கோ அலைந்து திரிந்து, தனக்கான வீடு என்று ஒரு மரத்தின் ஆள் துளை ஒன்றை கண்டுபிடித்து, அதில் குஞ்சுகளோடு குடித்தனம் நடத்தி வரும் அழகான பறவை ஒன்று, அந்த மரமானது அடியிலிருந்து மனிதன் ஒருவனால் வெட்டப்படும் நிகழ்வில், வீட்டையும் குஞ்சுகளையும் காப்பாற்ற வழியின்றி கதறிக் கதறி அந்த மரத்தையே சுற்றி வரும் தருணம் அதன் மன வோட்டம் என்னவாக இருக்கும்?


இந்த இடம் உனக்கு, அந்த இடம் எனக்கு என்று ஏரியா பிரித்து வாழ்ந்து வரும் நாய்கள், திடீரென்று அந்த இடத்தில் பிளாட் ஒன்று கட்டப்படுவதைப் பார்க்கையில் என்ன நினைக்கும்?

மரண நிகழ்வில், 'நான்' என்ற ஒருவன் இனிமேல் இல்லை என்ற எண்ணம் மனதில் ஓடும் தருணம் தோன்றும் உணர்ச்சிகள் எப்படி பட்டது? அவன் பிறந்த சுவடும் மறைந்த சுவடும் துளியும் இன்றி எப்பொழுதும் போல் இயல்பாக செயல்படப் போகும் பூமியை நினைக்கையில்....

ஆமாம், மணித்துளிகளே வாழ்வின் அடையாளம்..சில மணித்துளிகள் வாழ்வையே மாற்றக் கூடியன.