Wednesday, January 26, 2011

வேலியில் தொங்கும் ஓணான்கள்

வீடுகளால் சூழப்பட்டிருக்கும் சின்ன பனை மரத்தில் தனது நான்கு கால்கையும் இறுக்கமாய் அப்பிக் கொண்டு, நீண்டு ஒடுங்கிய தலையை ஒரு புறமாய் சாய்த்து, ஒருவித சோகம் படர்ந்த கண்களால் அச்சத்துடன் என்னை நோக்கும் ஓணான்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஒருவித குற்ற உணர்வு என்னில் வந்து போவதை தடுக்க முடியவில்லை.இந்த காலத்திலும் பள்ளி விடுமுறை நாட்களில் கைகளில் கூரான கம்புகளுடன் வேலியோர ஓணான்களை வேட்டையாட சிறுவர்கள் கும்பலாகச் செல்வதை நீங்கள் காண முடியும்.

ஓணான்கள் மட்டுமல்ல, தவளைகளும் புட்டான்களும் (தும்பி) கூட சிறுவர்களின் வன்கொடுமையிலிருந்து தப்ப முடிவதில்லை.


தன்னை நோக்கி ராக்கெட்டு போல பல திசைகளில் இருந்தும் பாய்ந்து வரும் கற்களில் இருந்து தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு ஓணான் படும் பாடு சொல்லி மாளாது. எந்த நேரத்தில் எங்கு இருந்து தாக்குதல் வரும் என்று அறிய இயலாமல் துடிக்கும் அதன் வாழ்க்கை உள்ளத்தை உருக்குவது.

அது மட்டுமல்ல. வாலில் ஓங்கி எரியும் நெருப்புடன் வலியால் துடித்து முன்னோக்கி அலறி ஓடும் ஓணான்களே சிறுவர்களின் புகை கக்கும் 'ஜெட்' விமானங்கள்.

புட்டான்களின் வாலை நுள்ளி எரிந்து விட்டு அதன் பின்புறத்தில் காகிதம் சொருகி பறக்க விட்டு வேடிக்கை பார்க்கும் சிறுவர் சமூகம் நம்முடையது.

நாய்களின் மீது சரியாகக் கல்லெறிவது என்பது சிறுவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் கூட கலை இங்கே.


இப்படியெல்லாம் செய்ய இந்த சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது யார்? அவர்களுக்கு இதெல்லாம் எங்கிருந்து தோன்றுகிறது? மனிதர்கள் பிறவியிலேயே வன்கொடுமை செய்பவர்கள் தானா? வலியைப் பார்த்து ரசிப்பவர்கள் தானா?

ஓணானும் தவளையும் ராமருக்குத் தாகம் எடுத்த போது மோண்டு கொடுத்தன என்ற புனைவு கதையைச் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதை இனிமேலாவது தவிருங்கள்.

நம்மைச் சுற்றி இருக்கும் உயிரினங்களைப் பற்றி நல்ல விதமாக குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். இந்த புவியில் பிறந்த நமக்கு இந்த நிலத்தின் மீது எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே அளவு உரிமை கொஞ்சமும் குறையாமல் நம்மைப் போலவே இங்கே பிறந்த மற்ற உயிரினங்களுக்கும் உள்ளது என்பதை கொஞ்சமும் மறந்து விடாதீர்கள்.

பாவம், அவைகளுக்கு உங்களைப் போல நிலங்களைப் பட்டாப் போடத் தெரியாது. அதனால் அவற்றை ஏமாற்றி விடாதீர்கள்.


10 comments:

sakthistudycentre-கருன் said...

நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்..

குடியரசு தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்பவர்கள் இதையும் கொஞ்சம் படிங்க..

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_26.html

MANO நாஞ்சில் மனோ said...

//எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே அளவு உரிமை கொஞ்சமும் குறையாமல் நம்மைப் போலவே இங்கே பிறந்த மற்ற உயிரினங்களுக்கும் உள்ளன என்பதை கொஞ்சமும் மறந்து விடாதீர்கள்.//


மிக சரியாக சொன்னீர்கள் மக்கா.................

Lakshmi said...

மிக வியாசமான கண்ணோட்டம் உங்களது.

எதிர்வீட்டு ஜன்னல் said...

மிகவும் அருமையான பதிவு நண்பரே ....
என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது இதை படித்த போது... நானும் மிகவும் வருத்த பட்டிருக்கிறேன் ..
என் மனதில் தோன்றியதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்... தான் சித்ரவதை செய்ய படுவதை கூட சொல்ல தெரியாமல் வாய் மூடி உயிரை விடும் அந்த சிறு உயிர்கள் மிகவும் பாவம்..
மனிதன் மட்டுமே வாழ படைக்கப்பட்டது அல்ல இந்த உலகம் என்பதை மனிதன் எப்பொழுது புரிந்து கொள்ள போகிறான் என்று தெரியவில்லை,
இப்பொழுதே அவன் சுய நலத்தினால் பல உயிர்கள் உலகில் இல்லை ...
முத்தாய்ப்பான கருத்து குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தான் இதை சொல்லி கொடுக்க வேண்டும்..
ஆனால் இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி தொலை காட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுப்பி புகழ் அடையாளம் என்பதிலேயே ஆர்வம காட்டுகின்றனர் ...
மனித மிருகங்களுக்கு இடையில் சிக்கி உயிரை விடும் அந்த பாவ பிறவிகளுக்கு மோட்சம் கிடைக்கட்டும் .......
அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....

Kurinji said...

very nice post...

குறிஞ்சிக் குடில்

ஞாஞளஙலாழன் said...

வருகைக்கு நன்றி கருண்.

ஞாஞளஙலாழன் said...

நன்றி நாஞ்சில் நண்பரே. அப்பப்பம் இங்கன வந்து போங்க மக்கா.

ஞாஞளஙலாழன் said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி லட்சுமியம்மா மற்றும் சகோதரி குறிஞ்சி.

நண்பா எதிர்வீட்டு சன்னல், உங்ககளைப் போன்ற நல்ல மனிதர்கள் இன்னும் உலகில் இருப்பதால் தான் மழை பொழிகிறது போல.

இராஜராஜேஸ்வரி said...

Nice post.Thank you for sharing.

ஞாஞளஙலாழன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி.

Post a Comment