Wednesday, February 16, 2011

திருமணம் - கொஞ்சம் யோசிக்கலாமே?

இப்போதெல்லாம் திருமணங்களை விட வரவேற்புகளில் (ரிசப்சன்) தான் அதிக கூட்டத்தைக் காண முடிகிறது. திருமணம் நடப்பதற்கு முந்தைய நாளே மணமகனும் மணமகளும் ஒன்றாக நின்று கொண்டு வரிசையாக வந்து கொண்டிருக்கும் அன்பளிப்புகளை வாங்கி அடுக்கிக் கொண்டே இருக்கிறார்கள் .

அன்பளிப்பு வழங்குவதற்காக, ரேஷன் கடையில் அரிசி வாங்க நிற்பது போன்று ஒரு பெரிய கூட்டமே வரிசையில் நின்று கொண்டிருப்பதைக் காண்கையில் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. திருமணங்களுக்குச் செல்வதின் நோக்கமே அன்பளிப்பு வழங்குவதும் வருகைப் பதிவு செய்வதும் தான் என்கிற அளவுக்கு நமது மனநிலை மாறிப் போய் விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது .

திருமணம் போன்ற விழாக்களின் போது தான் ஒரு குடும்பத்தின் பாரம்பரியம், கலாச்சாரம் எல்லாம் அழகாக வெளிப்படுவதைக் காண முடியும். அந்த பரபரப்பான தருணங்களும் எதையோ அடைந்து விட்ட பூரிப்பில் சுற்றித் தவழும் பெற்றோரின் கண்களும் நிச்சயம் இதயத்தை வருடக் கூடியன. காற்றை அடக்கிக் கண்களுடன் சேர்த்து தன்னையும் சுழற்றியவாறே அமுத இசையெழுப்பும் நாதஸ்வர வித்வானுக்கும், தன்னையே மறந்து மேளத்துடன் ஒன்றிப் போய் தலையை இருபுறமும் ஆட்டிக்கொண்டே இசை விளைவிக்கும் மேளக்காரரின் அர்ப்பணிப்புக்கும் கிடைக்க வேண்டியது பணம் மட்டுமல்ல நண்பர்களே, நமது பார்வை என்கிற அங்கீகாரமும் தான்.

இன்று ஐநூறு ரூபாய் கொடுத்தால் நாளை நமக்கும் அது திரும்பக் கிடைக்கும் என்ற கணக்கும், போகவில்லையென்றால் நாளை அவன்/அவள் முகத்தில் விழிக்க முடியாதே என்கிற எண்ணமும்தான் உங்களை திருமண விழாக்களுக்குப் போகச் செய்கிறதென்றால் தயவு செய்து நீங்கள் அங்கே போகாமல் இருப்பதே நல்லது. எதைச் செய்தாலும் மனதிற்குப் பிடித்திருந்தால் மட்டுமே செய்ய வேண்டும். வெளி வேஷம் எதற்கு?

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரே இடத்தில் திருமணமும் ரிசப்சனும் எதற்காக?

கொஞ்சம் யோசிக்கலாமே?

Sunday, February 6, 2011

வயலும் வாழ்வும்...முரணா?

காற்றின் திசைக்கேற்ப ஒரு பக்கமாய் சாய்ந்து ஊசல் போல் மொத்தமாக சேர்ந்து ஆடும் நெற்கதிர்கள் படர்ந்துள்ள வயல்வெளிகளை பேருந்துக்குள் இருந்து ரசிப்பது ஒரு தனி இன்பம்.


ஆனால் இப்போதெல்லாம் வெவ்வேறு நிறங்களில் அசைந்து ஆடும் கொடிகளும் அவற்றின் கீழே சீரான இடைவெளிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கற்களும் ஏதாவதொரு சிட்டி என்றவாறு தனது புதிய பெயரைச் சொல்லி கண் சிமிட்டும் அறிவிப்பு பலகைகளுமே சாலையின் இரு மருங்கிலும் நின்று பேருந்துகளைப் பார்த்து கையசைக்கின்றன.

நொந்து போய், தொலைக்காட்சியைத் திறந்தால், ஒரு பிளாட் வாங்கினால் ஒரு கார் இலவசம் என்றும் நான் புக் செய்து விட்டேன், நீங்கள் இன்னும் செய்யவில்லையா என்றும் சிரித்து சிரித்து பேசியவாறே ஜீன்ஸிலும் சுரிதாரிலுமாய் இளம்பெண்கள் நடை போடுகிறார்கள்..

இருக்கும் கொஞ்ச நஞ்ச வயல்களிலும் விவசாயம் செய்ய ஆளில்லை..காரணம்?
"ஏம்பா, அத உழுது, பயிர் செஞ்சி பத்தாயிரம் ரூபா நஷ்டப்படுறதுக்கு சும்மாவே இருக்கலாம்"...

படித்தவர்கள் பெரும்பாலும் விவசாயம் பக்கம் தலை காண்பிப்பதில்லை..அடுத்த தலைமுறையில் விவசாயம் என்னவாகும்?

காற்று, மழை போன்றவை விவசாயிக்கு பல நேரங்களில் எதிரி..இதையெல்லாம் தாண்டி ஒரு பொருளை விளைவிக்க அவன் கொடுக்கும் உழைப்பும், இரவு நேர கவலைகளும், அறுவடை நாளின் எதிர்பார்ப்புகளும் ஒரு குழந்தையை சுமக்கும் தாய்க்கு ஒப்பானது. ஆனால் கடைசியில் கிடைப்பது?

ஒரு கிலோ அரிசி நாற்பது ரூபாய்க்கு விற்கப்படும் போது, அதை உருவாக்கும் விவசாயி ஒரு ரூபாய் அரிசிக்கு ரேஷன் கடையில் கையேந்தி நிற்பது ஏன்?

இடைத்தரகர்கள் இல்லாத நிலையை அரசு உருவாக்கினாலன்றி இதற்கு ஒரு தீர்வு கிடைக்கப் போவதில்லை.

அதுவரையிலும் 'வயலும் வாழ்வும்' என்கிற வாக்கியமே முரணாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கும்!