Tuesday, March 15, 2011

சாதி கட்சிகளும் சேர சோழ பாண்டியரும்

தமிழ் நாட்டை ஆண்டு வந்த சேர சோழ பாண்டிய மன்னர்கள் தங்களுக்குள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருந்ததாகவும் அது வடக்கு மன்னர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடக் கூடாது என்றெண்ணிய சேர நட்டு இளங்கோ மூன்று நாடுகளின் பெருமை பேசும் சிலப்பதிகாரத்தை இயற்றியதாகவும் வரலாற்றில் படித்திருப்பீர்கள்.

சரி, நாம் பதிவிற்கு வருவோம்.தமிழ் நாட்டில் சாதி கட்சிகள் மெள்ள மெள்ள பெருகியும் வளர்ந்தும் வருகின்ற காலம் இது. சாதியற்ற சமத்துவ சமுதாயம் படைப்போம் என்று மேடைகளில் முழங்கும் கட்சிகள் எல்லாம் தேர்தல்களின் போது தங்களால் இயன்ற அளவுக்கு சாதிகளையும் சாதி கட்சிகளையும் வளைத்துப் போட்டு வளர்த்து விடும் முயற்சிகளில் ஈடுபடுவதையே நாம் காண்கின்றோம்.

முன்னணி கட்சிகளின் இத்தகைய தவற்றால் சில சாதி கட்சிகள் குறிப்பிடத் தகுந்த அளவில் வளர்ந்து விட்டன. இது மற்ற சாதி அமைப்புகளையும் சிந்திக்க வைத்திருப்பதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை.

சாதி கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் தங்கள் சாதிக்காரர்கள் தமிழ் நாட்டில் ஒன்றரை கோடிக்கு மேல் இருப்பதாகவும் தங்களுக்குச் சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் மொத்த வாக்குகளும் ஒன்றாகக் கிட்டும் என்றும் முக்கியக் கட்சி தலைவர்களிடம் வாக்குறுதி அளித்துத் தேவையான தொகுதிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். இவர்களின் கணக்குப் படி பார்த்தால் தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகையே பத்து கோடியைத் தாண்டும் போலிருக்கிறது.

இந்நிலை தொடருமாயின் பின்னொரு காலத்தில் சில சாதி கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சியமைக்கும் இழிநிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டு விடும்.
சில சாதி கட்சிகள் எதிர் கட்சி வரிசையில் அமரும்! தமிழகம் என்னவாகும்? நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

தி.மு.க, அ.தி.மு.க தொண்டர்கள் அவ்வப் போது மோதிக் கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த மோதலானது தொண்டர்களுடன் முடிந்து போகும். சாதி கட்சி தொண்டர்கள் மோதிக் கொண்டால் அது எங்கே போய் முடியும்?

ஒரு கூட்டத்தை வெல்ல வேண்டுமானால் அந்த கூட்டத்துக்குள் வேற்றுமைகளையும் ஒற்றுமையின்மையையும் வளர்த்து விட வேண்டும். வளர்ந்து வரும் சாதி அரசியல் இதைச் செவ்வனே நிறை வேற்றும்.

பிராமணன் தான் சாதியை உருவாக்கினான் என்று சகட்டு மேனிக்கு வசை பாடும் மனிதர்கள் அவன் உருவாக்கிய சாதியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதேன்?

இளங்கோவடிகளின் எண்ணம் பலித்திருந்தால் மூன்றில் ஒரு பகுதியை நாம் இழந்திருக்க மாட்டோம். இருக்கும் நிலத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் நம்மிடம் ஒற்றுமை அவசியம். ஆனால் நாம் தான் திருந்தவே மாட்டோமே!

Sunday, March 6, 2011

குலுக்கை முத்துக்கள் - மாசி 22

ஒரு முறை எங்கள் அலுவலகத்தில் ஆஸ்திரேலியரொருவர் மேலை நாட்டு கலாச்சாரம் பற்றியும் அங்கே நாங்கள் நடந்து கொள்ளவேண்டிய விதம் பற்றியும் மிகுந்த சிரத்தையுடன் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்ன ஒரு விடயம் என்னை மிகுந்த வருத்தமடையச் செய்தது. வேறொன்றுமல்ல, இந்தியாவில் ஒரு கடை வாயிலைக் கடந்து செல்கையில் அங்கு நின்று கொண்டிருந்த காப்பாளரொருவர் இவரது சட்டை பையிலிருந்த பேனாவை உருவி விட்டாராம். கேட்டிருந்தால் நானே கொடுத்திருப்பேனே என்றார். அது சரி, வெளிநாட்டினரிடமுமா நமது கைவரிசையைக் காண்பிப்பது?

அவர் சொன்ன மற்றொரு விடயம் வரிசையில் நிற்பது பற்றியது. நமது நாட்டில் ரேசன் கடை, பாஸ்போர்ட் அலுவலகம் என்று எங்கே சென்றாலும் ஒருவருக்கொருவர் இடித்துக் கொண்டும் முட்டிக் கொண்டும் தான் வரிசையில் நிற்பார்கள். கொஞ்சம் இடைவெளி விட்டால் யாரேனும் வந்து இடையில் புகுந்து விடுவார்களோ என்கிற அச்சம் இதற்குக் காரணமாக இருக்கலாம். இத்தகைய இடங்களில் நடக்கும் பெரும்பாலான சலசலப்புகளுக்குக் காரணம் தாறு மாறாக வரிசையில் நிற்பதும் கொஞ்சமும் கூச்சம் இன்றி இடையில் புகுவதும் தான். பணம் பெற்றுக் கொண்டு இடம் பிடித்துத் தருபவர்களைப் பாஸ்போர்ட் அலுவலகங்களில் மட்டுமல்ல, பேருந்துகளில் கூட நீங்கள் காண முடியும்.

மேலை நாடுகளில் வரிசையில் நிற்கும் போது மற்றவர்களை ஒட்டாமல் மிகுந்த இடைவெளி விட்டு நிற்பதே முறை என்றார். நல்ல பழக்கம். ஆனால் நாம் இதை இங்கே முயற்சி செய்ய இயலாது.

அவர் சொல்ல மறந்த கழிப்பிட விடயத்தை நான் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.

பேருந்து நிலைய சிறுநீர் கழிப்பிடங்கள் ஏன் இவ்வளவு மோசமான முறையில் பராமரிக்கப்படுகின்றன என்பது எனக்குக் கொஞ்சமும் விளங்கவில்லை. உள்ளே போய் இரண்டு நிமிடம் நிற்பதற்குள் வாந்தி வந்து விடும் போல் இருக்கிறது. தொற்று நோய் பரப்பும் கிருமிகளின் சொர்க்கமாக நமது பொது கழிப்பிடங்கள் விளங்குகின்றன. இதற்கு ஒரு தீர்வே இல்லையா?

நல்ல பழக்கவழக்கங்களை இறக்குமதி செய்வதென்பது அந்நிய மோகம் அல்லவே!

Tuesday, March 1, 2011

பைக் பரிதாபங்கள்

1
------------------------------------------
வேகமாக ஓடும்
இருசக்கர வாகனம்.
தலை கவசம்
ஆணின் தலையில் மட்டும்.
பின்னிருக்கையில் மனைவி
கைக்குழந்தையுடன்.
"ஹெல்மெட் அணிந்து
வாகனம் ஓட்டவும்".
ஓட்டுபவருக்கு மட்டும்?
----------------------------------------------

2
*******************************************
ஸ்கூட்டி யொன்று
தன்னை மிஞ்சுகையில்
தன்னிலை மறக்கும் ஆண்.
லாரிக்கும் பேருந்துக்கும்
இடையே
தத்தி முன்னேறும் இளைஞன்.
பின்னிருக்கை பெண்ணுக்குச்
சாகசம் காட்டும் காதலன்.
"சொர்க்கம் அருகிலே".
*****************************************

3
+++++++++++++++++++++++++++++++++
மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும்
பாய்ந்து செல்லும் இரண்டு சக்கரங்கள்.
கார்களைக் கடந்து செல்லும்
வாகன ஓட்டியைக்
கண்ணடிக்கும் பெண்கள்,
கார்களுக்குள்ளும் வெளியிலும்.
விளம்பரங்களில் மட்டும் !
++++++++++++++++++++++++++++++++++