Sunday, March 6, 2011

குலுக்கை முத்துக்கள் - மாசி 22

ஒரு முறை எங்கள் அலுவலகத்தில் ஆஸ்திரேலியரொருவர் மேலை நாட்டு கலாச்சாரம் பற்றியும் அங்கே நாங்கள் நடந்து கொள்ளவேண்டிய விதம் பற்றியும் மிகுந்த சிரத்தையுடன் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்ன ஒரு விடயம் என்னை மிகுந்த வருத்தமடையச் செய்தது. வேறொன்றுமல்ல, இந்தியாவில் ஒரு கடை வாயிலைக் கடந்து செல்கையில் அங்கு நின்று கொண்டிருந்த காப்பாளரொருவர் இவரது சட்டை பையிலிருந்த பேனாவை உருவி விட்டாராம். கேட்டிருந்தால் நானே கொடுத்திருப்பேனே என்றார். அது சரி, வெளிநாட்டினரிடமுமா நமது கைவரிசையைக் காண்பிப்பது?

அவர் சொன்ன மற்றொரு விடயம் வரிசையில் நிற்பது பற்றியது. நமது நாட்டில் ரேசன் கடை, பாஸ்போர்ட் அலுவலகம் என்று எங்கே சென்றாலும் ஒருவருக்கொருவர் இடித்துக் கொண்டும் முட்டிக் கொண்டும் தான் வரிசையில் நிற்பார்கள். கொஞ்சம் இடைவெளி விட்டால் யாரேனும் வந்து இடையில் புகுந்து விடுவார்களோ என்கிற அச்சம் இதற்குக் காரணமாக இருக்கலாம். இத்தகைய இடங்களில் நடக்கும் பெரும்பாலான சலசலப்புகளுக்குக் காரணம் தாறு மாறாக வரிசையில் நிற்பதும் கொஞ்சமும் கூச்சம் இன்றி இடையில் புகுவதும் தான். பணம் பெற்றுக் கொண்டு இடம் பிடித்துத் தருபவர்களைப் பாஸ்போர்ட் அலுவலகங்களில் மட்டுமல்ல, பேருந்துகளில் கூட நீங்கள் காண முடியும்.

மேலை நாடுகளில் வரிசையில் நிற்கும் போது மற்றவர்களை ஒட்டாமல் மிகுந்த இடைவெளி விட்டு நிற்பதே முறை என்றார். நல்ல பழக்கம். ஆனால் நாம் இதை இங்கே முயற்சி செய்ய இயலாது.

அவர் சொல்ல மறந்த கழிப்பிட விடயத்தை நான் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.

பேருந்து நிலைய சிறுநீர் கழிப்பிடங்கள் ஏன் இவ்வளவு மோசமான முறையில் பராமரிக்கப்படுகின்றன என்பது எனக்குக் கொஞ்சமும் விளங்கவில்லை. உள்ளே போய் இரண்டு நிமிடம் நிற்பதற்குள் வாந்தி வந்து விடும் போல் இருக்கிறது. தொற்று நோய் பரப்பும் கிருமிகளின் சொர்க்கமாக நமது பொது கழிப்பிடங்கள் விளங்குகின்றன. இதற்கு ஒரு தீர்வே இல்லையா?

நல்ல பழக்கவழக்கங்களை இறக்குமதி செய்வதென்பது அந்நிய மோகம் அல்லவே!

3 comments:

ஆர்.கே.சதீஷ்குமார் said...

உள்ளே போய் இரண்டு நிமிடம் நிற்பதற்குள் வாந்தி வந்து விடும் போல் இருக்கிற//
ஆமாம்..நகராட்சி இப்படித்தான் கழிவறை இருக்கணும்னு பழகிட்டாங்க

"குறட்டை " புலி said...

இங்கு கழிப்பறைகளின் மீது யாருக்கும் அக்கறை இருப்பதில்லை.கழிப்பறைக்கு செல்லும் முன் முகம் சுழிப்பவர்கள் கழிப்பறையை உபயோகித்தப்பின் அவர்களும் கண்டுக்கொள்ளவதில்லை என்பது தான் வேதனையான விஷயம்.

ஞாஞளஙலாழன் said...

வருகைக்கு நன்றிகள் சதீஷ் மற்றும் "குறட்டை " புலி.

Post a Comment