Tuesday, March 15, 2011

சாதி கட்சிகளும் சேர சோழ பாண்டியரும்

தமிழ் நாட்டை ஆண்டு வந்த சேர சோழ பாண்டிய மன்னர்கள் தங்களுக்குள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருந்ததாகவும் அது வடக்கு மன்னர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடக் கூடாது என்றெண்ணிய சேர நட்டு இளங்கோ மூன்று நாடுகளின் பெருமை பேசும் சிலப்பதிகாரத்தை இயற்றியதாகவும் வரலாற்றில் படித்திருப்பீர்கள்.

சரி, நாம் பதிவிற்கு வருவோம்.தமிழ் நாட்டில் சாதி கட்சிகள் மெள்ள மெள்ள பெருகியும் வளர்ந்தும் வருகின்ற காலம் இது. சாதியற்ற சமத்துவ சமுதாயம் படைப்போம் என்று மேடைகளில் முழங்கும் கட்சிகள் எல்லாம் தேர்தல்களின் போது தங்களால் இயன்ற அளவுக்கு சாதிகளையும் சாதி கட்சிகளையும் வளைத்துப் போட்டு வளர்த்து விடும் முயற்சிகளில் ஈடுபடுவதையே நாம் காண்கின்றோம்.

முன்னணி கட்சிகளின் இத்தகைய தவற்றால் சில சாதி கட்சிகள் குறிப்பிடத் தகுந்த அளவில் வளர்ந்து விட்டன. இது மற்ற சாதி அமைப்புகளையும் சிந்திக்க வைத்திருப்பதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை.

சாதி கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் தங்கள் சாதிக்காரர்கள் தமிழ் நாட்டில் ஒன்றரை கோடிக்கு மேல் இருப்பதாகவும் தங்களுக்குச் சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் மொத்த வாக்குகளும் ஒன்றாகக் கிட்டும் என்றும் முக்கியக் கட்சி தலைவர்களிடம் வாக்குறுதி அளித்துத் தேவையான தொகுதிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். இவர்களின் கணக்குப் படி பார்த்தால் தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகையே பத்து கோடியைத் தாண்டும் போலிருக்கிறது.

இந்நிலை தொடருமாயின் பின்னொரு காலத்தில் சில சாதி கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சியமைக்கும் இழிநிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டு விடும்.
சில சாதி கட்சிகள் எதிர் கட்சி வரிசையில் அமரும்! தமிழகம் என்னவாகும்? நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

தி.மு.க, அ.தி.மு.க தொண்டர்கள் அவ்வப் போது மோதிக் கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த மோதலானது தொண்டர்களுடன் முடிந்து போகும். சாதி கட்சி தொண்டர்கள் மோதிக் கொண்டால் அது எங்கே போய் முடியும்?

ஒரு கூட்டத்தை வெல்ல வேண்டுமானால் அந்த கூட்டத்துக்குள் வேற்றுமைகளையும் ஒற்றுமையின்மையையும் வளர்த்து விட வேண்டும். வளர்ந்து வரும் சாதி அரசியல் இதைச் செவ்வனே நிறை வேற்றும்.

பிராமணன் தான் சாதியை உருவாக்கினான் என்று சகட்டு மேனிக்கு வசை பாடும் மனிதர்கள் அவன் உருவாக்கிய சாதியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதேன்?

இளங்கோவடிகளின் எண்ணம் பலித்திருந்தால் மூன்றில் ஒரு பகுதியை நாம் இழந்திருக்க மாட்டோம். இருக்கும் நிலத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் நம்மிடம் ஒற்றுமை அவசியம். ஆனால் நாம் தான் திருந்தவே மாட்டோமே!

9 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஜாதி கட்சிகளுக்கு சவுக்கடி பதிவு..

MANO நாஞ்சில் மனோ said...

//ஆனால் நாம் தான் திருந்தவே மாட்டோமே!//

ஹா ஹா ஹா ஹா இதுதான் "நச்"....
என்னத்தை சொல்ல....

When it is high time said...

"பிராமணன் தான் சாதியை உருவாக்கினான் என்று சகட்டு மேனிக்கு வசை பாடும் மனிதர்கள் அவன் உருவாக்கிய சாதியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதேன்?
"

பிராமணன் உருவாக்கியது சாதிகள் அல்ல. அது வருணாசிரதர்மமே. அதன்படி நாலுவகை குலங்களுண்டு. அதில் முதலில் வருபவன் பிராமணன். அதில் வராதவன் தலித்து.

இக்குலமுறை இன்றொழிந்தது. ஆனால் பிராமணன் மட்டுமே பூனூல் போட்டு மந்திரங்க்ள் ஓதி சமஸ்கிருதன் தேவ பாசை, மற்றவை நீச பாசை எனச்சொல்லி, வருணாசிரதர்மத்தை கெட்டியாகப்பிடித்து வாழ்கிறான். அவ்வுரிமைக்காக சண்டைபோட்டு வருகிறான்.

சாதிகள் என்று இன்று சொல்லப்படுபவை பிராமணன் கண்டுபிடித்ததே அல்ல. அது தானாகவே உருவானவை. பிராமணனுக்கு அதற்கும் தொடரிபில்லை.

உண்மைகளை அறிந்து எழுதவும்.

ஞாஞளஙலாழன் said...

நன்றி கருண், நாஞ்சில் மனோ.

ஞாஞளஙலாழன் said...

//When it is high time Said...

//பிராமணன் உருவாக்கியது சாதிகள் அல்ல. அது //வருணாதர்மே.

வருணாசிரம தர்மத்தின் நீட்சி அல்லது சிதைவே இன்றைய சாதி அமைப்பு என்பது எனது புரிதல். ஒவ்வொரு வருணத்திலும் ஏற்பட்ட உட்பிரிவுகளே இன்றைக்கு நடைமுறையில் இருந்து வரும் வெவ்வேறு சாதிகள் என்ற கருத்தை இன்னமும் நான் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

இதை மறுக்கும் வகையில் தங்களிடம் ஏதேனும் ஆதாரம் இருந்தால், அந்த இரண்டு வரிகளை நீக்கி
விடுவதில் எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை.

எனினும் இந்த பதிவின் நோக்கம் என்ன என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

வருகைக்கு நன்றி.

♔ம.தி.சுதா♔ said...

நல்லதொரு விளக்கமான பதிவுங்க... நல்ல விடயங்களை உள்ளடக்கி பகிர்ந்துள்ளிர்கள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை

When it is high time said...

”வருணாசிரம தர்மத்தின் நீட்சி அல்லது சிதைவே இன்றைய சாதி அமைப்பு என்பது எனது புரிதல். ஒவ்வொரு வருணத்திலும் ஏற்பட்ட உட்பிரிவுகளே இன்றைக்கு நடைமுறையில் இருந்து வரும் வெவ்வேறு சாதிகள் என்ற கருத்தை இன்னமும் நான் நம்பிக் கொண்டிருக்கிறேன்.”

நானும்தான் அப்படி நம்பிக்கொண்டிருந்தேன். பின்னர் பார்த்தேன்: மற்றவர்கள் தங்களை வைசியர்கள், சத்திரியர்கள், சூத்திரர்கள் என்று இந்துமத சொற்களைவைத்து அடையாளம் காட்டிக்கொள்வதில்லை. அம்மதம் என்ன சொன்னது என்பதைப்பற்றியும் கவலை கொள்வதில்லை. தமக்கென தம் வருணத்துக்கென என்ன கடமைகள் அல்லது தர்மத்தை வைத்திருக்கிறது? அதை தாம் செய்தோமா? செய்ய வேண்டுமா ? என்பதைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது; தெரியவும் விழையவில்லை.
ஆனால், பாரதி முதற்கொண்டு, பார்ப்ப்னர்கள் அனைவரும் அதைத்தான் செய்கிறார்கள். செய்ய விழைகிறார்கள். பாரதி பார்ப்ப்னர்களை மும்முறை வேதம் ஓதச்சொன்னார். அவர்கள் கூட்டங்கள், விழாக்கள், உபன்யாசங்கள், வீட்டுச்சடங்குகள் எல்லாமே அவர்களை தம் வருண அடையாளத்தைப் பேணும்படி சொல்லி நினைவுக்குக் கொண்டு சென்று இன்றும் வாழ்கிறார்கள். அதற்காக அவர்கள் சங்கமும் கட்சியையும் வைக்கிறார்கள். பதிவுகளில் சண்டை போடுகிறார்கள்.
இப்போது சொல்லுங்கள். வருணத்தின் நீட்சி எங்கே யாரிடமும்?
சேர சோழ பாண்டியரைப்பற்றி எழுதும் நீங்கள், அதன் நீட்சி இன்று இருப்ப்தாகச்சொல்வீர்களா ? சோழன் குடவோலை இன்று ஜனனாயகம் ஆகி நீட்சியாகி விட்டது என்பீர்களா?
நீட்சி என்பது நேராக இருக்கலாம். அல்லது ரொம்பவும் தாக்கமாக இருக்கலாம். ஆனால் ரொம்ப மெல்லிய இழையாக இருக்க்லாம். அது இப்போது இருக்கிறதா சாதிமுறைகளில்? கோனார், செட்டியார், நாடார், முதலியார் என்பவரெல்லாம் வருணதருமத்தைக்க்டைபிடிக்கதவரையில், அன்னீட்சி ஒரு very very vague concept. முடிச்சுபோட முடியாது. இந்துமதத்தை விட்டு விலகியபின்னரும் பிள்ளை, நாடார், முதலியார் என்று சொல்கிறார்கள்! இது வருணத்தின் நீட்சியா ? இவர்களை அப்படி சொல்லவைத்தது பிராமணன் எழுதிய வருணமா ? தமிழ் முசுலீம்களும் ஒருகாலத்தில் இந்துக்கள்தான். அவர்களில் இருவர் பேதம் பண்ணும்போது, அதை பார்ப்ப்னர்ந்தான் சொல்லிக்கொடுத்தான் என உடான்ஸ் விடமுடியுமா ?
இன்றைய சாதிமுறைகள் காலப்போக்கில் உருவாகி, இன்று பலமிக்கனவானவை. அதன் ஆதிமூலம் வருணத்தில் இருக்கலாம். ஆனால் நீட்சி அல்ல.
நீட்சிதான் என்றால், ஆதாம் ஏவாளுக்கே ஏன் போகவில்லை நீங்கள்? கரிகாலனுக்கே ஏன் போகவில்லை. கல்தோன்றி மண் தோன்றாக காலத்தே ஏன் போகவில்லை.
பதிவின் நோக்கம் எதுவாக இருந்தாலும் எழுதப்படும் கருத்துகளில் பிழையிருக்கக்கூடாது. அவ்வாறு இருப்ப்தாகத்தோன்றின் சுட்டிக்காட்ட படிப்போருக்குக் கடைமையுண்டு. பொதுமேடையில் பதிவை வைத்துவிருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இராஜராஜேஸ்வரி said...

நாம் தான் திருந்தவே மாட்டோமே!//
TRUE.....

இக்பால் செல்வன் said...

// பிராமணன் தான் சாதியை உருவாக்கினான் என்று சகட்டு மேனிக்கு வசை பாடும் மனிதர்கள் அவன் உருவாக்கிய சாதியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதேன்? //

நிறையத் தடவை நானும் கேட்டுட்டேன். சரியான பதில் இல்லீங்க .. பிரமாணன் வருணாசிரமும் உருவாக்கினான் ? சரி

நம் மீது திணித்தான் சரி ?

ஆனால் இன்னும் அதையே பிடிச்சு தொங்கிட்டு, அதை மாற்றமல் விட்டுவிட்டு பிரமாணன் மீது பழிப் போடுவது சரியாகப் படவில்லை. உடனே பிரமாணன் தமிழில் வேதம் பாட விடமாட்டேங்கிறான், குருக்கள் ஆகத் தடுக்கிறான் என சொல்வார்கள். அதெல்லாம் உண்மைதானுங்க..

ஆனால் பிரமாணனா வந்து நாடார் பெண்ணுக்கு நாடார் மாப்பிள்ளை பாரு, செட்டியார் பெண்ணுக்கு செட்டியார் மாப்பிள்ளை பாரு என ஓதிவருகின்றார்கள் ????

இவர்களின் சாதி வெறிக்கு பிரமாணர் ஒரு சாக்கே ! இன்றையக் காலக் கட்டத்தில் நாடார் மாப்பிள்ளை - ரெட்டியார் பெண்ணைக் கட்டினாலும் பிரமாணர் தடுக்கப் போவதில்லை. வருணாசிரமத்தை விட்டு விலக நம்மால் முடிவதில்லை என்பதே உண்மை..

97 சதவீத மக்கள் சாதியத்தை கைவிட்டு ஒன்றாகிவிட்டால் 3 சதவீத பிரமாணனால் ஒன்றும் செய்ய முடியாது என்பது தான் எனது வாதமும்.

Post a Comment