Sunday, April 24, 2011

கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.

இந்த பதிவை எழுதுவதா வேண்டாமா என்று எனக்குள் ஒரு போராட்டம் நடந்தது. சாதி மதம் சார்ந்த பதிவுகளை வெளியிடுவதன் மூலம் எந்த ஒரு நண்பரின் மனதையும் புண்படுத்தி விடக் கூடாது என்பதே எனக்குள்ள ஆசை. ஆயினும் எனது அனுபவத்தை எனக்குத் தோன்றியதை வெளியிடுவதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம் கிறித்துவத்தின் மேல் எனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. இதற்கு முக்கியமான காரணம் கடவுளின் பெயரால் உயிர்களைப் பலியிடுவதை நான் மிகுதியாக வெறுத்து வந்ததே ஆகும். விவிலியத்தைப் படிக்க நேர்ந்ததும் அதில் உள்ள இயேசுவின் சொற்பொழிவுகள் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதும் மற்றொரு காரணம். தினமும் பைபிள் படிப்பதை நான் ஒரு கடமையாகக் கருதி செய்து வந்தேன்.

புதிய ஏற்பாடு முழுவதையும் வாசித்து முடித்த எனக்குப் பழைய ஏற்பாட்டையும் படிக்க வேண்டும் என்று தோன்றியது. புதிய ஏற்பாடு இலவசமாக கிடைக்கும் அளவுக்கு பழைய ஏற்பாடு கிடைப்பதில்லை. கல்லூரிக்குள் நுழைந்த பின்பு பழைய ஏற்பாட்டைப் படிக்கும் வாய்ப்பு நண்பரொருவர் மூலம் எனக்குக் கிட்டியது. ஆனால் அதை வாசிக்கத் தொடங்கிய பின்பு கிறித்துவத்தின் மேலுள்ள ஈடுபாடு எனக்குக் குறையத் தொடங்கியது. அதன் பின்பு தான் பலி கொடுத்தல் என்பது பழங்காலத்தில் மக்களிடையே புழங்கி வந்த நடைமுறை என்பதும் நாம் இன்னும் அதனைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம் என்பதும் புரிந்தது. மேலும் நல்ல கருத்துகள் எல்லா மதங்களிலும் உள்ளவை தானே.

இந்த கால கட்டத்தில் கடவுளின் மீது எனக்கு வெறுப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கு எனது ஒன்று விட்ட சகோதரியின் அகால மரணமும் ஒரு காரணம். மனதைத் தின்னும் சோகங்கள் எல்லோர் வாழ்விலும் ஏற்படுகின்றன. ஆனாலும் கடவுளின் மீதான மக்களின் நம்பிக்கைகள் தொடர்வதன் காரணம் எனக்கு இன்னமும் விளங்கவில்லை.

கல்லூரி காலத்தில் மத மாற்றம் செய்ய முனைபவர்கள் செய்யும் பரப்புரைகள் எனக்குக் கோபத்தை ஏற்படுத்தி இந்து மதத்தின் மீது பாசத்தை உருவாக்கின (குறிப்பு: கடவுளின் மீது அல்ல). இதனால் அரசியல் விவாதங்களின் போது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்குப் பரிந்து பேச ஆரம்பித்து விட்டேன் (இப்போது அல்ல நண்பர்களே)

சான்றாக சிலவற்றைச் சொல்ல விழைகிறேன்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை கல்லூரி விடுதிக்குச் செல்வதற்காக நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் திருநெல்வேலி செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்தேன். நல்ல வெயில். ஒரு வயதான பாட்டி என்னருகே வந்து, "என்ன மோனே வெயில்ல நிக்குற, கொஞ்சம் தள்ளி நிக்கலாமில்ல" என்று அன்பாகக் கேட்டார். அவரின் கருணை மீது உயர்ந்த எண்ணம் ஏற்பட்டு நான் திகைத்து நிற்கையில் இதைப் படி என்று ஒரு தாளை நீட்டினார். அதில் என்ன அச்சிடப்பட்டிருந்தது என்பது நான் சொல்லித் தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமா என்ன?

எனது தந்தையார் அரசு மருத்துவ மனையில் சில நாள்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டி வந்தது. திரும்பி வருகையில் எனது அம்மா நிறைய பிரச்சார தாள்களை கையுடன் கொண்டு வந்தார்!!!

இந்த மாதிரி நிறைய அனுபவங்கள்...

ஒரு சில பிரச்சார தாள்களில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் எனக்கு அதிகப்படியான மனச் சோர்வையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன. மற்றவர்களின் நம்பிக்கைகளையும் மதிப்பது தானே நல்ல பண்பின் அடையாளம்!

இந்த மாதிரி செய்கைகள் ஒரு மதத்தின் மீதான நல்லெண்ணத்தைக் குறைத்து விடும் என்பதை கிறித்துவ நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கிறித்துவ மதத்தின் சார்பில் எண்ணற்ற பள்ளிக் கூடங்கள், அநாதை இல்லங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி நிலையங்கள் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மாதிரி சேவைகள் தான் உங்களை சொர்க்கத்துக்குக் கொண்டு போகுமே தவிர அடித்தள மக்களை மத மாற்றம் செய்வதல்ல. நல்ல கருத்துகளை மக்களிடம் எடுத்து வையுங்கள். பரப்புங்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றினால் தான் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் சொர்க்கம் கிடைக்கும் என்றும் சொல்லி பாமர மக்களை ஏமாற்றுவது எந்த வகையில் நியாயம்?

சிந்திக்க வேண்டியது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமல்ல. தனது மதம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை மற்றவர்கள் மீது திணிக்க முயல்கிற அனைவரும் தான்.

Tuesday, April 19, 2011

வில்லன் தேர்தல் அறிக்கை

கடந்த தேர்தல்களில் கதாநாயகன், கதாநாயகி என்று சொல்லும் படியாக விதவிதமான தேர்தல் அறிக்கைகளைக் கண்டு 'கழி'த்தோம். ஆனால் வில்லன் இல்லாத தமிழ் படம் ஏது? ஆதலால் நானே ஒரு 'வில்லன்' தேர்தல் அறிக்கையைத் தயார் செய்து விட்டேன். இந்த வில்லனுக்கு நாலு ஓட்டாவது கிடைக்குமா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

'(ஒரு) மாதிரி' தேர்தல் அறிக்கை:

------------------------------------
மாநிலம் முழுவதும் முழு மது விலக்கு உடனடியாக கொண்டு வரப்படும். டாஸ்மாக் கடைகளில் பதநீர், இளநீர் மற்றும் நொங்கு போன்றவையே விற்பனை பொருள்களாக இருக்கும். சிகரெட், புகையிலை போன்ற அனைத்து நச்சு பொருள்களுக்கும் உடனடி தடை விதிக்கப்பட்டு சீரழிந்து வரும் இளைய தலைமுறை காக்கப்படும்.

ஒவ்வொரு துறைக்கும் அந்த துறை சார்ந்த வல்லுனர்களே அமைச்சர்களாக்கப்படுவர். அவர்களுக்குத் தங்கள் துறைகளில் நல்ல மாற்றங்கள் கொண்டுவர முழு சுதந்திரம் அளிக்கப்படும். ஒவ்வொரு துறையும் செய்த, செய்து வருகின்ற வேலைகள் மக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, அனைத்து செய்தித்தாள்களிலும் இணையத்திலும் மாதந்தோறும் வெளியிடப்படும் .

"பசுமை திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்படும். விளைநிலங்களைப் பாதுகாக்கும் பொருட்டு "ரியல் எஸ்டேட்" தொழில் முறைப்படுத்தப்பட்டு கடுமையாகக் கண்காணிக்கப்படும்.

மாவட்டங்கள் தோறும் மழை நீரைத் தேக்கி வைக்கும் பொருட்டு புதிய அணைக்கட்டுகள் உருவாக்கப்படும். ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளின் மீது ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அங்கு குடியிருக்கும் ஏழைகளுக்குப் புதிய வீடுகள் மாத வாடகைக்கு வழங்கப்படும்.

இயற்கை உரம் சார்ந்த ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதன் மூலம் மண்வளம் காக்கப்படும்.

தற்போது வழங்கப்பட்டு வரும் அனைத்து இலவசங்களும் உடனடியாக நிறுத்தப்படும். எல்லோருக்கும் வேலை கிடைக்கும் பொருட்டு புதிய தொழில் வளர்ச்சி காணப்படும்.

சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் சொத்து விவரங்கள் இணையத்திலும் செய்தித்தாள்களிலும் மாதந்தோறும் வெளியிடப்படும்.

லஞ்சம், ஊழல்களில் ஈடுபடுவோரின் பதவிகள் பறிக்கப்பட்டு கடுமையான சிறை தண்டனை வழங்கப்படும்.

கல்வி, மருத்துவம் ஆகிய சேவை துறைகள் முற்றிலும் இலவசமாக்கப்படும்.

மக்களின் நிறத்தைக் கேவலப்படுத்தும் அழகுசாதன விளம்பரங்களுக்குத் தமிழகத்தில் தடைவிதிக்கப்படும்.

மாநில அரசின் கடன்கள் சிறுகச் சிறுக அடைக்கப்படும். வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதி ஆதாரம் சிறப்பான திட்டங்களின் மூலம் திரட்டப்படும். மாநில அரசின் நிதி நிலைமை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும்.

சென்னையில் மட்டுமன்றி மாநிலம் தழுவிய அளவில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும். மதுரையில் துணை தலைநகரம் அமைக்கப்படும் .

தாய்மொழி கல்வி கட்டாயமாக்கப்படும். இதற்காக அறிவியல் சார்ந்த நூல்கள் தகுந்த வல்லுனர்களின் உதவியுடன் தமிழாக்கம் செய்யப்படும். ஆங்கிலம் ஒரு பாடமாக சிறப்பான முறையில் பயிற்றுவிக்கப்படும்.

மக்களின் குறைகளை 24 மணிநேரமும் பதிவு செய்யும் பொருட்டு அலைபேசி, இணையம் வழியாக இயங்கும் "குறை தீர்ப்பு மையங்கள்" மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்படும்.

எல்லா ஊர்களிலும் கோவில்களைப் போன்று நூல் நிலையங்கள் நிறுவப்படும். மாதந்தோறும் பரிசு போட்டிகள் நடத்தப்பட்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோர் மனதிலும் இலக்கிய ஆர்வம் பாய்ச்சப்படும். படைப்புகளைப் பெருக்கும் பொருட்டு சிறந்த படைப்புகள் மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

அரசின் வரிப்பணத்தில் கொண்டு வரப்படும் திட்டங்களுக்கு உயிருடன் உள்ள தனிமனிதர்களின் பெயர்களை இடுவதற்குத் தடை விதிக்கப்படும்.

இட ஒதுக்கீட்டில் புதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன் மூலம் இட ஒதுக்கீட்டின் பலன்கள் அனைத்து பின்தங்கிய மக்களையும் சென்று சேர வழி ஏற்படும்.

கலப்புத்திருமணம் செய்யும் அனைவருக்கும் அவர்களின் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும். ஆவணங்களில் சாதியைத் தெரிவிக்க விரும்பாதவர்களுக்கு அரசு பாராட்டு பத்திரம் வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.

---------------

Thursday, April 7, 2011

குலுக்கை முத்துக்கள் - பங்குனி 24

இது யதார்த்த சினிமாக்களின் காலம். மூன்று மாதங்கள் வெட்டாமல் வளர்த்த முடியை வாராமல் வருபவனே படத்தின் ஹீரோவாக இருக்க முடியும். மேலும் அவன் மறந்தும் குளித்துவிடக் கூடாது என்பது மற்றொரு கண்டிஷன். யப்பா..இது தான் கிராமத்து ஹீரோ-வின் அடையாளங்களாம். அப்படி ஒரு கேரக்டர் ஏதாவது ஒரு கிராமத்தில் இருந்தால் கண்டுபிடித்துத் தருபவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும். அதெப்படி, ஹீரோயின் மட்டும் மஞ்சள் நிற கேரளத்துக் கிளி?

இது தேர்தல் நேரம். பணத்துக்கு வாக்கை விற்பவர்கள் சோர்ந்து போய் இருப்பதாகக் கேள்வி. ஆனால் நிறைய நல்ல வாக்காளர்களும் இருக்கிறார்கள். யாராவது ஓட்டுக்குப் பணம் கொடுக்க வந்தால் பணத்திற்குப் பதிலாக தனது வீட்டு நாயைக் கொஞ்ச நேரம் மேய்த்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்வேன் என்றார் நண்பரொருவர். நாய் பத்திரம்.

எங்கள் ஊரில் முன்பு வாழ்ந்த தாத்தா பாட்டிகள் எவ்வளவு நடக்க முடியாமல் இருந்தாலும் வோட்டு போடாமல் மன அமைதி கொள்ள மாட்டார்கள். ஆனால் இப்போதெல்லாம் தாத்தா பாட்டிகளைப் பார்ப்பதே அரிதாக போய் விட்டது. நாற்பது வயது வருவதற்குள் ஆயிரத்தெட்டு நோய்கள் வந்து அறுபது வயதுக்குள் சொர்க்கம் புகுபவர்களே அதிகரித்து வருகிறார்கள். என்ன மருத்துவ வசதியிருந்து என்ன பயன்? காவல் நிலையமும் மருத்துவமனையும் பார்க்காதவனே நல்வாழ்க்கை வாழ்ந்தவன் என்பார்கள். ரசாயன உரத்தை அரிசியாக்கி சாப்பிடும் நாம் தொலைக்காட்சியையாவது தூரக் கடாசுவது நல்லது.

கடைசியாக ஒன்று...

ஏழைகள் இருப்பது வரை இலவசங்கள் தொடரும். டாஸ்மாக் கடைகளில் எக்கசக்க கூட்டம்.