Tuesday, April 19, 2011

வில்லன் தேர்தல் அறிக்கை

கடந்த தேர்தல்களில் கதாநாயகன், கதாநாயகி என்று சொல்லும் படியாக விதவிதமான தேர்தல் அறிக்கைகளைக் கண்டு 'கழி'த்தோம். ஆனால் வில்லன் இல்லாத தமிழ் படம் ஏது? ஆதலால் நானே ஒரு 'வில்லன்' தேர்தல் அறிக்கையைத் தயார் செய்து விட்டேன். இந்த வில்லனுக்கு நாலு ஓட்டாவது கிடைக்குமா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

'(ஒரு) மாதிரி' தேர்தல் அறிக்கை:

------------------------------------
மாநிலம் முழுவதும் முழு மது விலக்கு உடனடியாக கொண்டு வரப்படும். டாஸ்மாக் கடைகளில் பதநீர், இளநீர் மற்றும் நொங்கு போன்றவையே விற்பனை பொருள்களாக இருக்கும். சிகரெட், புகையிலை போன்ற அனைத்து நச்சு பொருள்களுக்கும் உடனடி தடை விதிக்கப்பட்டு சீரழிந்து வரும் இளைய தலைமுறை காக்கப்படும்.

ஒவ்வொரு துறைக்கும் அந்த துறை சார்ந்த வல்லுனர்களே அமைச்சர்களாக்கப்படுவர். அவர்களுக்குத் தங்கள் துறைகளில் நல்ல மாற்றங்கள் கொண்டுவர முழு சுதந்திரம் அளிக்கப்படும். ஒவ்வொரு துறையும் செய்த, செய்து வருகின்ற வேலைகள் மக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, அனைத்து செய்தித்தாள்களிலும் இணையத்திலும் மாதந்தோறும் வெளியிடப்படும் .

"பசுமை திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்படும். விளைநிலங்களைப் பாதுகாக்கும் பொருட்டு "ரியல் எஸ்டேட்" தொழில் முறைப்படுத்தப்பட்டு கடுமையாகக் கண்காணிக்கப்படும்.

மாவட்டங்கள் தோறும் மழை நீரைத் தேக்கி வைக்கும் பொருட்டு புதிய அணைக்கட்டுகள் உருவாக்கப்படும். ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளின் மீது ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அங்கு குடியிருக்கும் ஏழைகளுக்குப் புதிய வீடுகள் மாத வாடகைக்கு வழங்கப்படும்.

இயற்கை உரம் சார்ந்த ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதன் மூலம் மண்வளம் காக்கப்படும்.

தற்போது வழங்கப்பட்டு வரும் அனைத்து இலவசங்களும் உடனடியாக நிறுத்தப்படும். எல்லோருக்கும் வேலை கிடைக்கும் பொருட்டு புதிய தொழில் வளர்ச்சி காணப்படும்.

சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் சொத்து விவரங்கள் இணையத்திலும் செய்தித்தாள்களிலும் மாதந்தோறும் வெளியிடப்படும்.

லஞ்சம், ஊழல்களில் ஈடுபடுவோரின் பதவிகள் பறிக்கப்பட்டு கடுமையான சிறை தண்டனை வழங்கப்படும்.

கல்வி, மருத்துவம் ஆகிய சேவை துறைகள் முற்றிலும் இலவசமாக்கப்படும்.

மக்களின் நிறத்தைக் கேவலப்படுத்தும் அழகுசாதன விளம்பரங்களுக்குத் தமிழகத்தில் தடைவிதிக்கப்படும்.

மாநில அரசின் கடன்கள் சிறுகச் சிறுக அடைக்கப்படும். வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதி ஆதாரம் சிறப்பான திட்டங்களின் மூலம் திரட்டப்படும். மாநில அரசின் நிதி நிலைமை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும்.

சென்னையில் மட்டுமன்றி மாநிலம் தழுவிய அளவில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும். மதுரையில் துணை தலைநகரம் அமைக்கப்படும் .

தாய்மொழி கல்வி கட்டாயமாக்கப்படும். இதற்காக அறிவியல் சார்ந்த நூல்கள் தகுந்த வல்லுனர்களின் உதவியுடன் தமிழாக்கம் செய்யப்படும். ஆங்கிலம் ஒரு பாடமாக சிறப்பான முறையில் பயிற்றுவிக்கப்படும்.

மக்களின் குறைகளை 24 மணிநேரமும் பதிவு செய்யும் பொருட்டு அலைபேசி, இணையம் வழியாக இயங்கும் "குறை தீர்ப்பு மையங்கள்" மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்படும்.

எல்லா ஊர்களிலும் கோவில்களைப் போன்று நூல் நிலையங்கள் நிறுவப்படும். மாதந்தோறும் பரிசு போட்டிகள் நடத்தப்பட்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோர் மனதிலும் இலக்கிய ஆர்வம் பாய்ச்சப்படும். படைப்புகளைப் பெருக்கும் பொருட்டு சிறந்த படைப்புகள் மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

அரசின் வரிப்பணத்தில் கொண்டு வரப்படும் திட்டங்களுக்கு உயிருடன் உள்ள தனிமனிதர்களின் பெயர்களை இடுவதற்குத் தடை விதிக்கப்படும்.

இட ஒதுக்கீட்டில் புதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன் மூலம் இட ஒதுக்கீட்டின் பலன்கள் அனைத்து பின்தங்கிய மக்களையும் சென்று சேர வழி ஏற்படும்.

கலப்புத்திருமணம் செய்யும் அனைவருக்கும் அவர்களின் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும். ஆவணங்களில் சாதியைத் தெரிவிக்க விரும்பாதவர்களுக்கு அரசு பாராட்டு பத்திரம் வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.

---------------

12 comments:

Black Pearl said...

ஆனந்த், இது வில்லன் இல்லடா... கனவு... :)

Black Pearl said...

ஆனந்த், இது வில்லன் இல்லடா... கனவு...

-aniba

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பகிர்வு.

MANO நாஞ்சில் மனோ said...

//எல்லா ஊர்களிலும் கோவில்களைப் போன்று நூல் நிலையங்கள் நிறுவப்படும்.//


இது நல்லா இருக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

ஓட்டும் போட்டாச்சு....

suresh said...

ஆஹா... அருமையான தேர்தல் அறிக்கை..இவரல்லவோ நம்ம முதல்வர்..

வருங்கால முதலவர் அண்ணன் நாஞ்சிலார் வாழ்க.!!!!!!!

senthil velayuthan said...

good post.
read this also http://senthil1426.blogspot.com/2011/03/blog-post_29.html

ஞாஞளஙலாழன் said...

நன்றி அனிபா, இராஜராஜேஸ்வரி, மனோ, சுரேஷ் மற்றும் செந்தில்.

அருள் said...

வரலாறு காணாத வாக்குப்பதிவு எனும் கட்டுக்கதை.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_23.html

Lakshmi said...

ஆஹா, இப்படி ஒரு தேர்தல் அறிக்கையுடன் ஒரு அரசியல் வாதியாவது கண்களில் தென்பட மாட்டார்களா?

ஞாஞளஙலாழன் said...

வருகைக்கு நன்றி அருள்.

ஞாஞளஙலாழன் said...

---------------------------
Lakshmi said...

ஆஹா, இப்படி ஒரு தேர்தல் அறிக்கையுடன் ஒரு அரசியல் வாதியாவது கண்களில் தென்பட மாட்டார்களா?
-----------------------------

இப்போதைக்கு வாய்ப்பு இருக்கிற மாதிரி தெரியவில்லை:-)மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது மற்றொரு விஷயம்.

Post a Comment