Sunday, April 24, 2011

கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.

இந்த பதிவை எழுதுவதா வேண்டாமா என்று எனக்குள் ஒரு போராட்டம் நடந்தது. சாதி மதம் சார்ந்த பதிவுகளை வெளியிடுவதன் மூலம் எந்த ஒரு நண்பரின் மனதையும் புண்படுத்தி விடக் கூடாது என்பதே எனக்குள்ள ஆசை. ஆயினும் எனது அனுபவத்தை எனக்குத் தோன்றியதை வெளியிடுவதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம் கிறித்துவத்தின் மேல் எனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. இதற்கு முக்கியமான காரணம் கடவுளின் பெயரால் உயிர்களைப் பலியிடுவதை நான் மிகுதியாக வெறுத்து வந்ததே ஆகும். விவிலியத்தைப் படிக்க நேர்ந்ததும் அதில் உள்ள இயேசுவின் சொற்பொழிவுகள் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதும் மற்றொரு காரணம். தினமும் பைபிள் படிப்பதை நான் ஒரு கடமையாகக் கருதி செய்து வந்தேன்.

புதிய ஏற்பாடு முழுவதையும் வாசித்து முடித்த எனக்குப் பழைய ஏற்பாட்டையும் படிக்க வேண்டும் என்று தோன்றியது. புதிய ஏற்பாடு இலவசமாக கிடைக்கும் அளவுக்கு பழைய ஏற்பாடு கிடைப்பதில்லை. கல்லூரிக்குள் நுழைந்த பின்பு பழைய ஏற்பாட்டைப் படிக்கும் வாய்ப்பு நண்பரொருவர் மூலம் எனக்குக் கிட்டியது. ஆனால் அதை வாசிக்கத் தொடங்கிய பின்பு கிறித்துவத்தின் மேலுள்ள ஈடுபாடு எனக்குக் குறையத் தொடங்கியது. அதன் பின்பு தான் பலி கொடுத்தல் என்பது பழங்காலத்தில் மக்களிடையே புழங்கி வந்த நடைமுறை என்பதும் நாம் இன்னும் அதனைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம் என்பதும் புரிந்தது. மேலும் நல்ல கருத்துகள் எல்லா மதங்களிலும் உள்ளவை தானே.

இந்த கால கட்டத்தில் கடவுளின் மீது எனக்கு வெறுப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கு எனது ஒன்று விட்ட சகோதரியின் அகால மரணமும் ஒரு காரணம். மனதைத் தின்னும் சோகங்கள் எல்லோர் வாழ்விலும் ஏற்படுகின்றன. ஆனாலும் கடவுளின் மீதான மக்களின் நம்பிக்கைகள் தொடர்வதன் காரணம் எனக்கு இன்னமும் விளங்கவில்லை.

கல்லூரி காலத்தில் மத மாற்றம் செய்ய முனைபவர்கள் செய்யும் பரப்புரைகள் எனக்குக் கோபத்தை ஏற்படுத்தி இந்து மதத்தின் மீது பாசத்தை உருவாக்கின (குறிப்பு: கடவுளின் மீது அல்ல). இதனால் அரசியல் விவாதங்களின் போது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்குப் பரிந்து பேச ஆரம்பித்து விட்டேன் (இப்போது அல்ல நண்பர்களே)

சான்றாக சிலவற்றைச் சொல்ல விழைகிறேன்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை கல்லூரி விடுதிக்குச் செல்வதற்காக நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் திருநெல்வேலி செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்தேன். நல்ல வெயில். ஒரு வயதான பாட்டி என்னருகே வந்து, "என்ன மோனே வெயில்ல நிக்குற, கொஞ்சம் தள்ளி நிக்கலாமில்ல" என்று அன்பாகக் கேட்டார். அவரின் கருணை மீது உயர்ந்த எண்ணம் ஏற்பட்டு நான் திகைத்து நிற்கையில் இதைப் படி என்று ஒரு தாளை நீட்டினார். அதில் என்ன அச்சிடப்பட்டிருந்தது என்பது நான் சொல்லித் தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமா என்ன?

எனது தந்தையார் அரசு மருத்துவ மனையில் சில நாள்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டி வந்தது. திரும்பி வருகையில் எனது அம்மா நிறைய பிரச்சார தாள்களை கையுடன் கொண்டு வந்தார்!!!

இந்த மாதிரி நிறைய அனுபவங்கள்...

ஒரு சில பிரச்சார தாள்களில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் எனக்கு அதிகப்படியான மனச் சோர்வையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன. மற்றவர்களின் நம்பிக்கைகளையும் மதிப்பது தானே நல்ல பண்பின் அடையாளம்!

இந்த மாதிரி செய்கைகள் ஒரு மதத்தின் மீதான நல்லெண்ணத்தைக் குறைத்து விடும் என்பதை கிறித்துவ நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கிறித்துவ மதத்தின் சார்பில் எண்ணற்ற பள்ளிக் கூடங்கள், அநாதை இல்லங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி நிலையங்கள் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மாதிரி சேவைகள் தான் உங்களை சொர்க்கத்துக்குக் கொண்டு போகுமே தவிர அடித்தள மக்களை மத மாற்றம் செய்வதல்ல. நல்ல கருத்துகளை மக்களிடம் எடுத்து வையுங்கள். பரப்புங்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றினால் தான் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் சொர்க்கம் கிடைக்கும் என்றும் சொல்லி பாமர மக்களை ஏமாற்றுவது எந்த வகையில் நியாயம்?

சிந்திக்க வேண்டியது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமல்ல. தனது மதம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை மற்றவர்கள் மீது திணிக்க முயல்கிற அனைவரும் தான்.

4 comments:

Balu said...

I dont know how to reach you.

>> i like this.
கடவுளின் பெயரால் உயிர்களைப் பலியிடுவதை நான் மிகுதியாக வெறுத்து வந்ததே ஆகும்

Please read this book..
http://www.vallalyaar.com/?p=409

Talk to ayya. He is in kanyakumari

guna said...

true true true

ஞாஞளஙலாழன் said...

நன்றி பாலு மற்றும் குணா. Thanks for your suggestions Balu.

ramkaran said...

”இந்த கால கட்டத்தில் கடவுளின் மீது எனக்கு வெறுப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கு எனது ஒன்று விட்ட சகோதரியின் அகால மரணமும் ஒரு காரணம். மனதைத் தின்னும் சோகங்கள் எல்லோர் வாழ்விலும் ஏற்படுகின்றன. ஆனாலும் கடவுளின் மீதான மக்களின் நம்பிக்கைகள் தொடர்வதன் காரணம் எனக்கு இன்னமும் விளங்கவில்லை”

நண்பரே ! அதற்கான காரணத்தை நான் அலசி ஆராய்ந்திருக்கிறேன். பின்வரும் லிங்கை கிளிக் செய்து என்னுடைய பதிவை படிக்கவும். தங்களின் மேலான கருத்தையும் கூறவும்.
http://tamiljatakam.blogspot.com/2011/01/4.html

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்
இராம்கரன்

Post a Comment