Friday, July 29, 2011

மூட்டை பூச்சியும் உலர்ந்த சப்பாத்தியும்....

சமீபத்தில் பெங்களூரிலிருந்து நாகர்கோயில் செல்வதற்காக ஒரு எஸ்.இ.டி.சி. பேருந்தில் ஏறினேன். பொதுவாக நெடுந்தூர பேருந்து பயணங்களை நினைத்தாலே, மனிதர்களை இருக்கைகளாக நினைக்கும் 'பெரிய' மனிதர்களும் பரபரா காற்றிலும் சன்னலை திறந்து வைத்து நமது காதுகளையும் கண்களையும் பதம் பார்க்கும் விண்டோ சீட் ஆசாமிகளும் நினைவுக்கு வந்து மிரட்டுவார்கள்...

ஆனால் இந்த முறை என்னருகில் வந்து அமர்ந்தவர் என்னை விட ஒல்லி...வந்தவுடன் அவர் செய்த முதல் வேலை சன்னலை மூடியது...அடடா பேருந்து நின்று கொண்டிருக்கும் போது கூடவா சன்னலை மூட வேண்டும்? எஸ்.இ.டி.சி. பேருந்தின் நறுமணம் எனது மூக்கைத் துளைத்தது...தேவலை..பேருந்து புறப்பட்டவுடன் எல்லாம் சரியாகி விடும்...

தனது பையிலிருந்து இரண்டு கோக் பாட்டில்களை அவர் வெளியில் எடுத்தார். பாவம் ரொம்ப தாகம் எடுக்கும் ஆசாமி போல என்று நினைத்தேன்...தமிழ் நாட்டின் டாஸ்மாக் வளர்த்து விட்ட ஆசாமி என்று பின்னர் தான் புரிந்தது. இரண்டு கோக் பாட்டில்களையும் கண் இமைக்கும் முன் காலி செய்த அந்த டிப்-டாப் ஆசாமி அயர்ந்து தூங்க ஆரம்பித்தார்... நானோ அவர் வாந்தி எடுப்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்...

இப்போது நான் தூங்கிக் கொண்டிருப்பதாக நீங்கள் நினைத்தால் நீங்கள் டயடாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்..நெட்டை மூடிவிட்டுப் பிறகு வாசியுங்கள்!

கண்ணை மூடி ஒரு யோகி போல அமர்ந்திருந்தேன் (நீ சும்மாவே அப்படி தானே இருப்பாய் என்று கேட்கக் கூடாது). திடீரென்று "பஸ் பத்து நிமிஷம் நிக்கும்..டீ...காப்பி...டிபன்.." என்று சத்தம் போட்டு குழந்தைகளை உணவருந்த அழைக்கும் தாய் போல மீண்டும் மீண்டும் கூவினார் நண்பர்..

உணவகத்துக்குள்....

சப்பாத்தி என்ன விலை?

செட் முப்பது ரூபாய்..

சரி கொண்டு வாருங்க.

சார்..சிக்கன், மட்டன், எக் மசாலா.....

அதெல்லாம் வேண்டாம்..சப்பாத்தி மட்டும் போதும்..

கூட்டுக்கு என்ன சார் வாங்குறீங்க? (ம்....இதுக்கு மேல இறங்கி வர முடியாது)

அடப்பாவி மக்கா...ஒரு இத்துப் போன சப்பாத்தி பதினஞ்சி ரூபாயா? குருமா கிடையாதா? ஏலே, என்னங்கடா நடக்குது இங்க?

ஒரு வழியாக சென்ன மசாலா வாங்கி ரெண்டு சப்பாத்தி சாப்பிட எழுபது ரூபாய் ஆகி விட்டது..

அவர் வாந்தி எடுத்தால் பார்த்துக் கொள்ளலாம். எப்படியாவது தூங்கி விட வேண்டும் என்று நினைத்து சிறிது கண்ணயர்கையில்.....தோளில் எவரோ சவாரி செய்வது தெரிந்து விழிப்பு வந்தது...நமக்கு தான் இன்னும் கல்யாணம் ஆக வில்லையே, என்ன இது புது பொண்டாட்டி போல என்று நினைத்து கண்களைத் திறக்கையில் புரிந்தது......அவர்கள் தோளில் மட்டும் சவாரி செய்யவில்லை, வெள்ளை சட்டையை சிவப்பாக்க முயல்கிறார்கள் என்று...(இலவச நிறம்மாற்று சேவை போல)...

மூட்டைப் பூச்சியின் புண்ணியத்தில் அந்த பேருந்தே ஒரு திருமண வீடு போல ஜொலிஜொலித்தது...ஆமாம், யாருமே தூங்க வில்லை:-)

அடுத்து என்ன என்று கேட்கிறீர்களா? அப்படியே பக்கத்தில் தெரியும் லிங்கை கிளிக்கி மற்ற பதிவுகளையும் படியுங்க...படிச்சி ஹிட் ரேட் கொடுங்க மக்கா, அப்ப தானே எழுத தோணும்...நான் வீட்ல இறங்கியாச்சு..கொஞ்ச காலம் கழித்து ஆப்பமும் புட்டும் சாப்பிடப் போறேன், டிஸ்டர்ப் பண்ணாம படிக்கணும் சரியா?

-----------------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு (to SETC department): தயவு செய்து அரசு பேருந்துகளை நன்றாக பாராமரியுங்கள்..அழுக்காகி கிடக்கும் துணிகளை சன்ன்னலில் தொங்க விடாதீர்கள். சீட் கவரை அவ்வப் போது மாற்றுங்கள்....
-------------------------------------------------------------------------------------------------